Friday, November 7, 2008
இந்திய இராணுவத்தில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவியுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவியிருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் செப்டம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பணியில் இருக்கும் ராணுவ அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்து பயங்கரவாதிகள்தான் அந்த குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியதாகவும், அவர்களுக்குத் தேவையான வெடிகுண்டு மற்றும் பண உதவிகளை பணியில் இருக்கும் ராணுவ அதிகாரி
ஸ்ரீகாந்த் புரோகித் அளித்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் நிலையில், மேலும் பல ராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, மாலேகான் சம்பவத்தில் பணியில் இருக்கும் ராணுவ அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஏண்டனி கவலை தெரிவித்தார். இந்தப் பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டறிவதில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி பிபிசி
No comments:
Post a Comment