வன்னியில் கொடுங்கோலாட்சி. கிழக்கில் இராணுவப்பேயாட்சியாம் விருகோதரன்.
கிழக்கு மாகாண நிலப்பரப்புக்களை புலிகள் இழந்து புறமுதுகு காட்டி ஓடிய போது தாம் விட்டு ஓடிச்சென்ற இடங்கள் யாவும் எவ்வித முக்கியத்துவமும் அற்ற வெறும் தரிசநிலங்கள் என்று கூறிய புலிகள் தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வீரம் விளைந்த பூமியான வன்னி நிலப்பரப்பில் ஒரு சாண் தன்னும் சிறிலங்கா படை பிடித்துப்பார்க்கட்டும் அப்போது புலிகளின் பலத்தை உலகிற்கு தெரியப்படுத்துவோம் என வீராப்பு பேசி வந்தனர். அந்நிலையில் வன்னியின் மூன்று முனைகளால் போர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது முறியடிப்புப் போரை நாடாத்தி வந்த புலிகள் இன்று வரை பூனகரி கைப்பற்றப்பட்;டு அங்கு சங்குப்பிட்டி ஜெற்றியில் திருத்தவேலைகள் இடம்பெறுகின்றதென்பதை மக்களுக்கு கூற மறந்து விட்டனர்.
வன்னி மக்களை மீட்கும் மனிதாபிமான போரில் ஈடுபட்டுள்ள படையினருடன் முறியடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு பூனகரிவரைக்கும் இராணுவம் சென்றது தெரியாமல் போனது வியப்பிற்குரிய விடயமே. கடந்த 3-4 மாதங்களாக தாம் சந்தித்த இழப்புக்களைப்பற்றி பேச விரும்பாத புலிகள் நவம்பர் மாதம் 27ம் திகதிக்கு இன்னும் சிறிய காலங்களே உள்ளது. அதுவரை பொறுத்திருக்க வேண்டும் தலைவர் சொல்வார் என்று பிதற்றி திரிந்தவர்கள் இப்போது நாவடைத்து நிற்கின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் பீனிக்ஸ் பறவையாக எழுந்து 2009 நவம்பர் 27ப் பற்றி கதைசொல்வர் என்பது வரலாறினூடாக நாம் கண்ட அனுபவம்.
கடந்த வருட உரையில் சினிமாப்பட வசனங்களுடன் வந்து அனுராதபுர வான்படைத்தளத்திற்கு எல்லாளனப்படையை காட்டி சிங்களத்தின் தலையில் ஆப்படித்திருக்கின்றேன் என்று கூறிய வேலுப்பிள்ளையின்ர பொடி இம்முறை இலங்கை ஜனாதிபதி அவர்கள் என்னுடைய தலையில் ஆப்பிறக்கியிருக்கிறார் என்று சொல்லாமல் சொல்லி விட்டு போயிருக்கின்றார். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இனஅழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம் என்று வாய் கூசாமல் கூறியிருக்கின்றார். இன அழிப்பு இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றது என புலிகளால் காட்டப்பட்ட பூச்சாண்டி எடுப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இப்பூச்சாண்டிக்கு எடுபட்டு உலகநாடுகள் வழங்கிய ஆதரவுக்குரலும் உதவியும் தான் இலங்கையில் வேலுப்பிள்ளையின் பொடியின் பயங்கரவாதம் மேலோங்க வழிவகுத்தது என உணர்ந்துள்ள உலகநாடுகள் இன்று தமது வரலாற்றுத்தவறுக்கு பிராயச்சித்தம் தேடுமுகமாக தாம் வளர்த்துவிட்ட பயங்கரவாதத்தை அடக்குவதற்கு இலங்கை அரசிற்கு உதவி புரிந்து வருகின்றனர். இந்நாடுகள் பயங்கரவாதிகளின் கொடும் பிடியில் இருந்த அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்ற இலங்கை அரசிற்கு உதவி புரிகின்றதே தவிர உலக நாடுகளுக்கு இலங்கையில் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற தேவை இல்லை என்பதே உண்மையாகும். தனித்து நின்று தமிழரின் தார்மீகப்பலத்துடன் போராடுகின்றாராம். யார் இவரை தனித்து நின்று போராடச் சொன்னார்கள் என்பது கேள்வி? இலங்கையில் பெரும்பான்மையின அரசியல்வாதிகளால் தமிழ் மக்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டதென்பது இன்று பெரும்பான்மையின அரசியல்வாதிகளாலும் அம்மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகி விட்டது. ஆனால் அன்று அந்த பாரபட்சத்திற்கெதிராக போராட புறப்பட்ட, போராட்டத்தின் தார்பரியம் என்ன என்பதை நன்றாக உணர்ந்திருந்த சிறந்த போராளிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களையும் கொடூரமாக கொன்றொழித்துவிட்டு இன்று தனிமையாக போராடுகின்றாராம். ஆதுவும் மக்களின் தார்மீக பலத்தில் நின்று போராடுகின்றாராம். மக்களின் தார்மீக பலம் என்பது ஒரு சில மணித்தியாலயங்கள், தான் பூட்டி வைத்திருக்கும் இரும்புக்கதவைத் திறந்து விட்டால் தெரியும். இன்றும் மக்கள் நாளொன்றுக்கு 120 பேர் என்ற வீதத்தில் உயிரைப் பணயம் வைத்த வேலுப்பிள்ளையின் பொடியின் பிடியில் இருந்து தப்பி வருகின்றனர். மக்களின் விடிவிற்காய் போராடி வருகின்றாராம். மக்களின் முடிவிற்காய் போராடி வருகின்றேன் என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். வன்னியில் பிறக்கும் பிஞ்சுகளை முற்றிக்காயாக முன்பு தன்னுடைய பாசிசப்பாசறைக்கு கொண்டுவந்து அவர்களுக்கு விசமூட்டி எதிர்காலத்தில் தமிழர் தடத்தை இலங்கையில் இல்லாதொழிக்க போராடுகின்றேன் என்றிருந்தால் சாலப்பொருத்தமாக இருந்திருக்கும்.
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம் என அழுது புலம்புகின்றார். தம்மை ஓர் விடுதலை இயக்கம் என கூறும் வேலுப்பிள்ளையின் பொடி இத்தனை சரிவுகளுக்கும் இழப்புகளுக்குமான காரணம், தான் கொண்டுள்ள பாசிச போக்கும் மனிதகுலத்திற்கெதிரான செயற்பாடுகளுமே என்பதை உணரமறுப்பதுடன் எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம் எனவும் வீறாப்பு பேசுகின்றார். இவர் எதிர் கொண்ட வல்லாதிக்க சக்கிகள் யார்? ஓன்று இலங்கை இராணுவம் மற்றயது இந்திய அமைதிப்படை. அமைதிகாக்க வந்த அமைதிப்படையுடன் மோதி தான் மலையை பிழந்து மாமரத்தில் சாத்திய மாவீரனாக கொக்கரித்துக் கொண்டிருக்கின்றார். வடகிழக்கில் இந்தியப் படை குடிகொண்டிருந்த காலத்தில் வடகிழக்குக்கு வெளியே புலிகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்திருந்த அன்றைய அரசின் அனுசரணையுடனேயே அமைதிகாக்க வந்த படைகளை தாக்கினார் என்பதும், இந்திய அரசு அன்று புலிகளை பூண்டோடு அழிக்க முற்பட்டிருந்தால் இன்று பிரபாகரனது நாமம்கூட உச்சரிக்கப்பட மாட்டாதென்பதும் யாவரும் அறிந்த உண்மை.
சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்கின்றார். மக்களின் உரிமைக்காக ஆயுதமேந்திப் போராடுவதாக கூறிக்கொண்டு அவ்வாயுதங்களை கொண்டு தமிழ் மக்களது அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறித்து இப்போராட்டத்தின் கொத்தடிமைகளாக அவர்களை வைத்திருக்கும் வேலுப்பிள்ளையின் பொடி தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான் வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது எனும்போது தமிழ் மக்கள் இன்று புலிகளால் அனுபவிக்கின்ற கொடுமைகளைப்போல் என்றுமே எந்தத்தரப்பாலும் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மறைப்பதுடன் எமது மக்கள் பாரபட்சத்தால் பீடிக்கப்பட்ட போது அதற்கெதிராக ஆயுதம் தூக்கிய ஏனைய இயக்க வரலாறுகளையும் அதன் இயக்க போரளிகளின் தியாகங்களையும் இலகுவாக மறைத்துவிடலாம் என எத்தனிப்பதானது கேலிக்குரியதாகும். இன்று இலங்கையில் நடப்பது தேசியத்தலைமைக்கான அதிகாரப் போரே அன்றி தமிழ் மக்கள் சார்பாக அங்கு எதுவும் இல்லை என்பதை எம்மக்கள் ஆயிரத்திதொளாயிரத்து எண்பதுகளின் கடைசிப்பகுதியில் உணர்ந்து கொண்டுள்ளனர்.
ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுசெய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது என்பதன் மூலம், தான் ஆயதங்களால் வன்முறையே செய்கின்றார் என்பததை லாவகமாக ஒப்புக்கொண்டுள்ளார். உரிமைப் போராட்டம் நாடாத்தும் ஓர் இயக்கம் எவ்வாறு ஆயுத வன்முறையை புரியமுடியும்? வேலிப்பிள்ளையின் பொடியிடம் எவரும் வலுக்கட்டாயமாக ஆயதங்களைத் திணிக்கவில்லை. உரிமைப் போராட்டம் எனும் பெயரால் ஆயுதப்போராட்டம் உருப்பெற்றபோது இந்திய அரசே ஆயுதங்களையும் இராணுவ உதவிகளையும் வழங்கியது. ஆனால் அது தான்கொடுத்த ஆயுதங்களை 1987 திருப்பி பெற்றுக்கொண்டதுடன் இலங்கை இனப்பிரச்சினயில் நேரடியாக கலந்து கொண்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வொன்றையும் தமிழர் தரப்பிற்கு பெற்றுக்கொடுத்தது. அதை நடைமுறைப்படுத்துவதற்காக தனது படையைக் கூட இலங்கைக்கு அனுப்பயிருந்தது. ஆனால் அவ்வாறான ஜனநாயக முறையில் நாட்டம் கொள்ளாத வேலிப்பிள்ளையின் பொடி வலுக்கட்டாயமாக மக்களின் விருப்பிற்கு அப்பால் ஆயதங்களைத் எடுத்து இன்றுவரை எம் தேசத்திற்கு இன்னல்களை கொடுத்தக்கொண்டிருக்கும் மறுபுறத்தில் நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது என்கிறார். போரை நிறுத்தி அமைதி வழியில் தீர்வு என்றால் எதற்காக ஆயதங்கள்? இலங்கை அரசாங்கம் இன்று விதித்துள்ள நிபந்தனையை ஏற்று ஆயதங்களை கீழே வைக்கவேண்டும் அல்லவா? அடுத்தது தீர்வு எனும் போது இவர் எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்பதை வெளிப்படையாக கூற வேண்டும் இன்றுவரை இவருக்கு புறியாணி வேண்டுமா? இல்லை சோறும் கறியும் வேண்டுமா? அல்லது அரிசியும் சாமான்களும் தந்தால் சமைத்து சாப்பிடுவாரா? என்று தமிழ் மக்களுக்கு தெரியாது. சமாதானப்பேச்சு என்று காலம் காலமாக சென்று எதை பேசுகின்றார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகின்றது. ஆனால் பேச்சுவார்தைகளின் போது புலிகளை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று ஏனைய தமிழ் இயக்கங்களை வந்தேறு குடிகள் என குறிப்பிட்டு விரட்டுங்கள் என அரசாங்கத்திடம் வேண்டுகின்றார் என்பது மட்டும் யாவரும் அறிந்த ரகசியம்.
நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். போருக்கு முடிவுகட்டி ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம் என்றும் பிதற்றுகின்றார். நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் சாமாதான காலப்பகுதிகளில் நிராயுதபாணிகளாக நின்ற மாற்று இயக்க அங்கத்தவர்களையும் புலிப்பாசிசத்தை ஏற்க மறுத்த புத்திஜீவிகளையும் கொன்றொழித்தார். புலிகள் சமாதானத்திற்கு வந்திருந்த காலகட்டங்களில் தாம் மரணதண்டனை வழங்குவதில் பல நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளளோமென்றும் அவ்வாறு மரதண்டனை வழங்குவதாயின் அது மேதகு தலைவர் அவர்களால் பரிசீலிக்கப்பட்டு அவர் அனுமதி வழங்கி கையொப்பம் இட்ட பின்புதான் நிறைவேற்றப்படும் என கதைவிட்டிருந்தனர். அவ்வாறாயின் சாமாதான காலத்தில் இடம்பெற்ற அனைத்து கொலைகளும் வேலிப்பிள்ளையின் பொடியின் கையொப்பத்துடன் நிறைவேறியது என்றுதானே அர்த்தம்.
சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் தமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே பேச்சுக்களிற் கலந்துகொண்டாராம். அதை அவரால் செய்ய முடிந்ததா? ஆக அவர் எதை உரித்து காட்டியிருக்கிறார் என்றால், தன்னுடன் கொண்டலையும், உலகவழமைக்கு மாறானதும் உலகில் எந்த ஒரு மூலையிலும் நாம் கேள்விப்பட்டிராததுமான ஏகபிரதிநிதித்துவ வெறியை உலகிற்கு உணர்த்தி, தனது பாசிசக்கொள்கையை பறைசாற்றி, உலக அரங்கிலே வேண்டப்படாத, தீண்டத்தகாத, கொலைவெறிபிடித்த பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டுள்ளது.
சர்வதேசத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தபோது சமாதானம் பேசிய உலகநாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்காததுடன் கவலைகூடத் தெரிவிக்கவில்லையாம். இது விடயத்தில் தமிழ்ச்செல்வன் உயிரோடு இருந்திருந்தால் தலைவருக்கு தகுந்த பதில் கொடுத்திருப்பார். புலிகளியக்கத்தை தடைசெய்வது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலினை செய்துகொண்டிருந்த சமயத்தில் தமிழ்ச்செல்வன் எமது இயக்கத்தை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தினர் யார்? என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் அனுமதி கேட்டோ நாம் எமது காடேறித்தனங்களை அவிட்டிருந்தோம் என்றும் கேள்விக்கு மேல் கேள்வி தொடுத்திருந்தார். இவற்றை மறந்து வேலுப்பிள்ளையின் பொடி சர்வதேசத்திடம் என்ன முகம் கொண்டு எதையும் எதிர்பார்க்க முடியும்?
இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனவாம். அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றனவாம். தனது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றனவாம். எனவே தன்னுடைய போராட்டம் நிராகரிக்கப்பட்ட விடயம் என்பதை ஏற்றுக்கொள்ளும் அவர் கனிந்துவருகின்ற இந்தக் காலமாற்றத்திகேற்ப இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என இந்தியாவின் காலடியில் விழுகின்றார். ஆனால் இவருடைய இந்த நேசக்கரத்திற்கு இந்திய ஊடகங்கள் சப்பாத்துக்காலால் எட்டி உதைத்துள்ளது.
அன்று இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தனவாம். ஈழத்தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற நிலைபாட்டில் ஓர் நியாயமான கிளர்சிக்கு தூபமிட்டு அதற்கான சகல உதவிகளை வழங்கிய அணுகுமுறையும் பின்நாட்களில் நேரடியாகவே தலையிட்டு ஓர் நீதியான, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை தமிழர் தரப்பிற்கு பெற்றுக்கொடுத்தது எந்த வகையில் தமிழர் தரப்பிற்கு பாதகமாக அமைந்திருந்தது? ஒட்டு மொத்தத்தில் தமிழரின் நிரந்தர தீர்வு புலிப்பாசிசத்தின் முடிவாகி விடும் என்பதுவே அவரது ஆதங்கம்.
இனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் தனது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்குமிடையே பகைமையை வளர்த்துவிட்டதாகவும் அப்பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்ததாகவும் அதன் ஒட்டுமொத்த விளைவாக மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்ததாகவும் கூறுகின்றார். ஏன்றுமே சிங்கள அரசை நான் நம்பியதில்லை என்று கூறும் வேலிப்பிள்ளையின் பொடி தான் சிங்கள அரசுகளுடன் தேன்நிலவு கழித்ததையும் அத்தேன்மயக்கத்தில் மதிமயங்கி தமிழ்மக்களின் காவலர்களாக நின்ற இந்திய அரசிற்கு எதிராக போர் தொடுத்ததையும,; அவ்வாறு அவர் தொடுத்த போரினாலேயே தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை சந்தித்ததையும் ஏற்றுக்கொள்ளும் அதேசமயத்தில் தான் இழைத்த அந்தத்தவறுகளுக்காக இந்திய அரசிடமோ அன்றில் அந்நாட்டு மக்களிடமோ மற்றும் அவர் இழைத்த தவறுகளால் சொல்லொணாத்; துயரங்களை அனுபவித்த இலங்கைத் தமிழர்களிடமோ மன்னிப்புக்கோர இவரது இறுமாப்பு இன்னும் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. காலம்வரும் போது நேரம் இடம்கொடுக்குமா என்பது கேள்வி?
தனது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான குரலெழுப்புமாறு இந்தியாவைக்கோரும் வேலிப்பிள்ளையின் பொடி இந்தியாவிற்கும் தனது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்துநிற்பது தம்மீதான தடையே என்றும் அதை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறாராம். இந்தியாவிற்கும் தமிழருக்குமான இடைவெளி இவரது பாசிச வெறியால் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை அம் மண்ணிலேலே கொன்றொழித்தால் வந்ததென்பதையும் அப்படுகொலையின் பிரதிபலிப்பாகவே அவரது பாசிச அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டதென்பதையும் நன்கு தெரிந்து கொண்டும் இந்தியாவிடம் மண்டியிட்டு தடையை நீக்க கோரும் இவர் இந்தியப் பிரதமரின் கொலைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயங்குவதேன்? மேலும் இத்தனை நேரமும் தான் நியாயமான தீர்வுகளுக்காக போராடுவதாக கூறிவிட்டு இறுதியில் தமிழீழ தனியரசு போராட்டம் என்கின்றார். முதலாவது இவரது போராட்டத்தின் நோக்கம் என்ன என்பதைத்தன்னும் அறுதிதியும் இறுதியுமாக இவரால் சொல்ல முடியுமா?
தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டிநின்ற எம்மக்களிடம் சிங்களத்தேசந்தான் போரைத் திணித்திருக்கிறதாம் என்று கூறும் வேலிப்பிள்ளையின் பொடி தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்குத் தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறதாம் என்று ஆடு நனைகின்றது என ஓநாய் அழுத கதை சொல்லுகின்றார். தமிழ் மக்கள் போரையும் வன்முறையையும் விரும்பவில்லை என்பதை 1987ல் ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து நிரூபித்து நின்றனர். ஆனால் பிராகரன் போர்மோகம் கொண்டலைவதை தொடர்ந்தும் தன்னால் அனுமதிக்க முடியாதெனவும் அமைதி வழியில் சென்று நீதி வேண்டப்போகின்றேன் என 21 வருடங்கள் வேலிப்பிள்ளையின் பொடியின் வலது கரமாக இருந்து போரை முன்னெடுத்துச் சென்ற கருணா கூறியபோது வெருகலில் வேலிப்பிள்ளையின் பொடி ஆடிய கொலைவெறியாட்டம் மக்களுக்கு நல்லதோர் உதாரணம் சிங்களதேசம்தான போரைத் திணித்தது என்பதற்கு. 21 வருடங்கள் தனது வலது கரமாக இருந்து வெற்றிகளைக் குவித்தபோது தானைத்தளபதி தலைவரின் நெறிப்படுத்தலில் வெற்றிகளைக் குவித்தார். அப்போது அவர் தமிழர் விரோதியாக இருக்கவில்லை என்று பிரபாகரன் கூறுகின்றார். ஆனால் அவர் பிரபாகரனுடன் இருந்து தான் செய்வது தமிழர் விரோதம் என்பதை உணர்ந்துதான் இன்று உதறித்தள்ளி விட்டு தமிழருக்க தன்னால் முடியுமானவற்றை செய்துகொண்டிருக்கின்றார். ஆனால் பிரபாகரன் கூறும் தமிழர் தேசம் போரை, வன்முறையை விரும்பவில்லை என்பதை உணர்ந்த அவர் வெளியேறியபோது தானைத்தளபதியாக இருந்தவர் தமிழர் விரோத குழுவாக மாறிவிட்டார் என்பது தான் வேடிக்கை. இவ்வாறு இவர் தமிழ் மக்களை மந்தைகள் என கணித்து கதைசொல்லுகின்றார். ஆனால் அந்தக்காலம் கருணாவுடன் மலையேறிப்போய்விட்டுது.
வன்னியில் கொடுங்கோல் ஆட்சி நாடாத்தும் வேலிப்பிள்ளையின் பொடி கிழக்கில் வன்முறைகளை கட்டவிழ்த்து இராணுவக்கெடிபிடிகளை ஊக்குவித்து அங்கு இராணுவ பேயாட்சி நடக்கின்றதென்கின்றார். கிழக்கை பொறுத்தவரை அங்கு இராணுவக்கெடுபிடிகள் ஆங்காங்கே இருக்கின்றது. ஆனால் அங்குள்ள வன்னிமக்கள் அனுவபிக்கின்ற துயரங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் நாள்தோறும் பத்திரிகை வாசிக்கின்றார்கள். அங்குள்ள மக்களுக்கு உலகில் என்ன நடக்கின்றது என அறிய இணையச் சேவைகள் இருக்கின்றது. கட்டாய இராணுபயிற்சி இல்லை. படைக்கு கட்டாய ஆட்சேர்பு இல்லை.
தாம் விரும்பிய இடங்களுக்கு தாம் விரும்பிய நேரத்தில் போய்வரலாம். தாம் விரும்பிய வானொலியை கேட்கலாம், பத்திரிகையை வாசிக்கலாம,; தொலைக்காட்சியை பார்க்கலாம், விரும்பிய நபர்களுடன் கருத்து பரிமாறலாம், விரும்பிய பாடசாலைக்குச் செல்லலாம், விரும்பி நேரத்தில் திருமணம் முடிக்கலாம், தாம்விரும்பிய கொழில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் மேலும் சகல அடிப்படை உரிமைகளையும் அவர்கள் அனுபவிக்கின்றனர். ஆனால் மேற்குறிப்பிட்ட உரிமைகளில் ஒன்றைத்தன்னும் வன்னியில் வேலிப்பிள்ளையின் பொடியின் கொடும்பிடியில் உள்ள மக்களால் அனுபவிக்க முடியுமா? VIII
0 comments :
Post a Comment