Saturday, November 29, 2008
கசப்புணர்வுகளை மறந்து நாம் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என்ற சகோதரத்துவத்துடன் முன்நோக்கி செல்வோம் என்கின்றார் ரிஎம்விபி ஊடகப்பேச்சாளர் கமலநாதன்
மட்டு மக்களின் இன்றைய அவல நிலை குறித்து இலங்கைநெற் சார்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தட்சணாமூர்த்தி-கமலநாதன் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவியபோது. அவர் தெரிவித்ததாவது.
பல சதாப்ப காலங்களாக இடம்பெற்ற அகோரப் போரின் வடுக்களினால் பல உயிர்களையும், உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து எண்ணிலடங்கா துன்ப சுமைகளை நித்தமும் சுமந்த எம் உறவுகளின் உள்ளங்களில் மீண்டும் ஓர் மரணச்சமை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
கடந்த கால கசப்பான அனுபவங்களையெல்லாம் மறந்து எம்மக்கள் ஓர் நிம்மதியான சுதந்திர காற்றை ஆனந்தக் கண்ணீர் வடித்து சுவாசித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மனித நேயமற்ற கொலைகளும், ஆட்க்கடத்தல்களும், கப்பம்பெறுதலும் இந்த மண்ணில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. மனிதப்பிறவியின் நோக்கங்களையும் இலட்சியங்களையும் அறிந்திராத நச்சுப்பாம்புகளும் நயவஞ்சகப் பேய்களும் மீண்டும் மட்டு மண்ணில் அபாய மரண ஓலத்தை ஒலிக்க விட்டிருக்கிறார்கள். எமது மக்களுக்கு இக் கன்ம வினையை கொடுப்பவர்கள் யார்? என்பதை அறிந்து கொண்டு இனியும் நாம் நேரம் தாழ்த்த முடியாது.
இன்று எமது மண்ணில் தொடர்ந்து கொண்டிருக்கும் அனியாய கொடுமைகளுக்கு அணை போட வேண்டும். இதற்கு எம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு அரசியல் களத்தில் நிற்கும் அனைத்து தலைமைத்துவங்களும் தங்களிடத்திலுள்ள கசப்புணர்வுகளை மறந்து நாம் அனைவரும் ஒரே குடிமக்கள் என்ற சகோதரத்துடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதனூடாகவே எமது மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் மரணச்சுமையை இறக்கி வைக்க முடியும் என்பதனை நான் வினயமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment