ரகுவின் கொலையாளிகள் என தான் சந்தேகிப்போரை வெளிப்படையாக கூற பிள்ளையான் தயங்குவதேன்? - விருகோதரன்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் கொலையானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பனிப்போரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மக்களின் அரசியல் நலன் கருதி அவுஸ்திரேலிய நாட்டில் தான் அனுபவித்திருக்கக்கூடிய சிறந்த வாழ்க்கையைத் துறந்து ரகு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளியத்தில் இணைந்தார் எனக் கூறப்படுகின்றது. எந்தக்காலகட்டத்திலும் கொலைகளை நியாயப்படுத்த எவராலும் முடியாது. இலங்கை அதியுயர் நீதிமன்றம் வழங்குகின்ற மரணதண்டனைகள் கூட இங்கு நிறைவேற்றப்படுவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.
இந்நிலையில் ரகுவின் கொலையைத் தொடர்ந்து கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்து பலரையும் பலகோணத்தில் சிந்திக்க வைத்துள்ளதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளியக்கத்தினுள் நிலவுகின்ற பனிப்போரை வெளிக்கொணர்ந்துள்ளது. இக்கொலையின் பின்னணியில் நிச்சயமாக புலிகள் இல்லை என்று பிள்ளையான் கூறுகின்றார். அவ்வாறு அவர் கூறுவதற்கான மூல காரணம் முதலமைச்சர் புலிகளுடன் இரகசிய உறவைப் பேணுகின்றாரா? என்கின்ற கேள்வி இங்கே எழுகின்றது. அவ்வாறாயின், புலிகள் தாம் இக் கொலையில் சம்பந்தப்படவில்லை என முதலமைச்சருக்கு நேரடியாக தெரியப்படுத்தி இருக்க வேண்டும். புலிகளின் நேரடித்தகவலை ஆதாரமாக கொண்டு முதலமைச்சர் இக்கொலையில் புலிகள் சம்பந்தப்படவில்லை என கூறலாம். அன்றேல் ரகுவிற்கு புலிகளுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டும் அதை வைத்து ரகுவை புலிகள் கொல்லமாட்டார்கள் என பிள்ளையான் நம்பியிருந்திருக்கவேண்டும். அல்லது முதலமைச்சருக்கு ஒரு தரப்பினர் அல்லது தனிநபர் மீது ஆதாரங்களுடனான சந்தேகம் இருக்க வேண்டும்.
இப்போது நேரடியாக விடயத்திற்கு வருவோமாயின் பிள்ளையான் யார் மீது தனது சுட்டு விரலை நிமிர்ந்து நின்று நேராக நீட்டாமல் கூனிக்குறுகி தலையை, மூக்கை சுற்றி நீட்டுகின்றார்? இக்கொலையை கருணா தரப்பினர் மேற்கொண்டதாக பிள்ளையான் கூறுகின்றாரா? அவ்வாறாயின் எதற்காக இக்கொலை மேற்கொள்ளப்பட்டது? இது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் இடம்பெற்றுள்ள முதலாவது உள்வீட்டுப்படுகொலையா? எது எவ்வாறாயினும் கொலைகள் நியாப்படுத்த முடியாதவை. ஆக ரகுவின் கொலையை வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடையே பலகாலங்களாக இருந்து வந்த பிளவு நியாயப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகின்றது என்பது மட்டும் உண்மை. ரகு அவுஸ்திரேலிய நாட்டில் இருந்து ஆசாபாசங்களை, பெற்ற குழந்தைகளை, இனிய வாழ்வை எல்லாம் துறந்து தாயகம் திரும்பியிருந்தார் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. அவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து அவ்வியக்கத்தின் ஊடாக மக்களுக்கு சேவை செய்ய முனைந்த நபர் தவறான வழிநடத்தலினால் இவ்வியக்கத்தை பிளவு படுத்தினாரா? அல்லது இயக்கத்தினுள் பிளவை ஏற்படுத்தியவர்கள் ரகுவை தவறான வழிக்கு கொண்டு சென்றார்களா?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் பிளவுபடுவதென்பது ஒன்றும் நிகழமுடியாத நிகழ்வல்ல. இலங்கையிலே ஓவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள சிறப்புரிமைகளின் அடிப்படையில் அவர் அல்லது அவள் தான் விரும்பிய அரசியல் கட்சி ஒன்றை ஆதரிக்கவோ அன்றில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவோ பூரண உரிமை உண்டு.
ஆனால் இங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஓர் பாரிய சுமை சுமத்தப்பட்டிருக்கின்றது. அது யாதெனில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரப்பிடியில் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமாயின் ஆகக்குறைந்தது அவ்வியக்கத்திற்கு சமபலமான அமைப்பு அல்லது கட்சி ஒன்று தமிழர் மத்தியில் கட்டி எழுப்பப்படவேண்டும் என்பதாகும். புலிகளியத்தில் இருந்து பிரிந்து வந்து தனியாக ஓர் அமைப்பை நிறுவியவர்கள் அவ்வமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் முன்னரே தமக்குள் பிளவுகளை உண்டுபண்ணியமையானது மிகவும் துரதிஷ்டவசமானதே. எவ்வாறு இப்பிளவு ஏற்பட்டது? இதன் சூத்திரதாரிகள் யார் என்ற கேள்விகளுடன் இக்கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் போதே அங்கு திட்டமிட்டமுறையில் வஞ்சனைகள் இடம்பெற்றுள்ளதென்பது பின் நாட்களில் தெரியவந்தது.
காலஞ்சென்ற ரகு அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சி எனது பேரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என கடந்த மாதம் 23ம் திகதி பிபிசி யின் தமிழோசைக்கு சொல்லும் வரைக்கும் முதலமைச்சர் எமது கட்சியின் தலைவர் கருணா அவர்கள் என்றே கூறிவந்திருக்கின்றார். கட்சியின் தலைவர் கருணா இல்லை என கூறுவதற்கு பிள்ளையான் ஏன் தயங்க அல்லது பயப்படவேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளியக்கத்தின் தலைவராக ரகு அவர்களை அவ்வமைப்பினர் ஏகமனதாக அன்றில் தேர்தல் ஒன்றை நாடாத்தி உரிய முறையில் தெரிவு செய்திருந்தார்களாயின் ஏன் அவ்விடயத்தை காலாகாலமாக மறைத்து வந்தார்கள்? இதன் பின்னணியில் இருக்கக்கூடிய சூட்சுமங்களை மக்கள் எவ்வாறு உணரமுடியும்? கருணா நாடு திரும்பியிருந்த போது பிள்ளையான் மற்றும் அவ்வியக்கத்தின் அன்றைய ஊடகப்பேச்சாளர் ஆகியோர் பிபிசி யின் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் எமது கட்சியின் தலைவர் கருணா அம்மான் அவர்களே என்று கூறியிருந்தார்கள். ஆனால் அக்கட்சி அப்போது ரகுவின் பெயரில் பதியப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா இல்லை என்பதை இவர்கள் மறைத்துவந்தற்கான பின்னணி மக்கள் இவ்விடயத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை இவர்கள் ஊகித்திருக்க வேண்டும். அன்றில் கட்சியின் பெரும்பாண்மை உறுப்பினர்கள் கருணாவையே தலைவராக ஏற்க தயாராக இருந்திருக்க வேண்டும். அன்றில் கருணாவின் பலத்தில் தங்களால் அரசியல் நாடாத்த முடியும் என்கின்ற எதிர்பார்ப்பில் விடயத்தை வெளியே விடாமல் அரசியல் நாடாத்த எத்தனித்திருக்க வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் மக்களைக் குழப்பாமல் கருணவே தலைவர் என சொல்லி வைத்திருந்து கருணாவை போட்டுத்தள்ளி விட்டு முழுக்கட்சியையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரமுடியும் என்ற கபடநோக்கம் இருந்திருக்க வேண்டும்.
இந்நிலையில் காலஞ்சென்ற ரகு அவர்கள் மேற்படி இவ்விடயங்களை எவ்வாறு கையாண்டார் என்பது இங்கு தொங்கி நிற்கும் வினாவாகும். இவை அனைத்திற்கும் ரகு உடந்தையாக இருந்தாரா? அவ்வாறு அவர் இவ்விடயங்களுக்கு உடந்தையாக இருந்திருந்தால்கூட அதற்கான தண்டனை வேறுவிதமாக இருந்திருக்க வேண்டும். ரகு இந்த கபடநாடகங்களுள் பலவந்தமாக உள்வாங்கப்பட்டு தவறான முறையில் வழிநாடாத்தப்பட்டாரா? அவ்வாறாயின் அவரது மக்களுக்கு சேவைசெய்யும் உணர்வை தமது அற்பசொற்ப விடயங்களுக்கு எவர் பாவித்தார்களோ அவர்களே இக்கொலைக்கு முழுப்பொறுப்பும் கூறவேண்டியவர்களாகும். குறிப்பாக பிள்ளையான் கட்சியின் தலைவர் கருணா அம்மானே என கூறிவந்ததில் இருந்து கருணா தலைவர் இல்லை என்கின்ற விடயத்தை வெளியில் விட்டால் பாரிய அபாயம் அல்லது அனர்த்தம் ஒன்று இருக்கின்றது என்பதை பிள்ளையான் உணர்ந்து வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது. அந்நிலையில் தமது தேவைகளுக்காக ரகுவைப்பாவித்த பிள்ளையான் அவரது பெயரில் கட்சியை பதிந்தது போல் அவரது பாதுகாப்பிலும் மிக அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும. அதைவிடுத்து அவரது கொலையில் அரசியல் இலாபம் தேட முற்படுவது கபட அரசியலின் வெளிப்பாடேயாகும்.
எனவே நடந்து முடிந்த கொலைகளை வரலாற்றில் பதிந்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு தரப்பினரும் தமக்குச் சாதகமான லாபங்களைத்தேட முற்படாமல் இக்கொலைகளை முடிவுக்கு கொண்டுவர முனையவேண்டும். இந்நிலையில் ரகுவைப்போல் பிரான்ஸ் நாட்டில் தான் தனது சுகமான வாழ்வைத்துறந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரும்பாடுபட்ட திலீபன் அவர்களது கொலையை இன்றும் பிள்ளiயானால் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட கொலையாக பத்திரிகைவாயிலாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் கருணா இவ்விடயத்தில் திலிபனின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டதாக ஓர் இணையத்தின் ஊடாக அறிய முடிந்தது. ஆனால் திலீபன் விடயத்தில் கண்கண்ட சாட்சிகள் இருக்குமானல் கருணா பிள்ளையானை சட்டத்தின் முன்நிறுத்த தயங்குவதேன்?
கருணா-பிள்ளையானிடையேயான அதிகார பிணக்கு அப்பாவி பொதுமக்களையும் போராளிகளையும் காவுகொள்வது தடுத்துநிறுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு கடந்த காலங்களில் பிள்ளையான் தரப்பினர் கருணாதரப்பு வீரா மீது பழிபோடுவதற்காக அங்குள்ள பொறியலாளரான பெண்மணி ஒருத்தைரை கூட சுட்டுக்கொன்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறன கொலைகளின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். தலைவர் என்பவர் கட்சிக்காகவும் கட்சி என்பது மக்களுக்காகவும் என்ற நிலைமாறி தலைவருக்காக கட்சி கட்சிக்காக மக்கள் என்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையே இன்று கிழக்கில் காணப்படுகின்றது என்று கூறினால் மிகையாகாது.
எனவே பதவிகளுக்காகவும் அதிகாரங்களுக்காகவும் உயிர்கள் பலிகொடுப்பதை தடுத்து நிறுத்தி இருதரப்பினரும் சமரசம் செய்து உடனடித்தீர்வைக் கண்டுகொள்ளவேண்டும். அத்துடன் இவ்விடயத்தில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடயம் யாதெனில் சாமி வரம்கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் எனும் நிலையில் ஓவ்வொரு பிதேசங்களுக்கும் பொறுப்பாளர்களாக உள்ள நபர்கள் பிரச்சினைக்கான தீர்வுகாணும் விடயத்திற்கு தடைக்கற்களாக நிற்பதாகவும் தெரியவருகின்றது. ஓவ்வொரு பிரதேசங்களிலும் குறுநிலை மன்னனர்களாக வலம்வரும் இவர்கள் கருணா-பிள்ளையான் பிணக்குத் தீர்ந்தால் தமது குறுநிலமன்னர் பதவிகள் கேள்விக்குறியாகிவிடும் என கருதுவதால் இப்பிரச்சினையை என்றுமே பிச்சைக்காரன் கைப்புண் கதையாகவே வைத்திருக்க முயற்சி செய்துவருகின்றனர் என்பது திண்ணம்.
அத்துடன் இக்கட்சியினுள் ஏற்பட்டுள்ள இத்தனை பிளவுகளிற்கும் அசாத்மௌலான என்கின்ற முஸ்லிம் இனத்தவரே காரணம் என மக்கள் மிகவும் விசனம் அடைந்துள்ளனர். அசாத்மௌலான விடயத்தில் கருணா மிகவும் தவறிழைத்துள்ளார். கருணா இந்த நபரது உள்நோக்கம் என்னவென்று சரியாக புரிந்துகொள்ளாமல் அமைப்பினுள் இவரை உள்ளவாங்கியதாக தெரியவருகின்றது. ஆனர்ல் இன்று அவர் தனது நோக்கத்தை நிறைவேற்றுமுகமாக பிள்ளையானை தவறான வழிக்கு கொண்டுசெல்வதை உணர்ந்த எமது நலன் விரும்பிகள் பலர் இந்த நபரை உடனடியாக வெளியேற்றுமாறு அறிவுரை கூறியிருந்தும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் பிள்ளையான் இல்லை என்பது தெரியவருகின்றது. எனவே அந்நபரை கட்சியில் இருந்து மிகவிரைவில் வெளியேற்ற வேண்டியது அவரை கட்சியினுள் உள்வாங்கிய கருணாவின் கடமையாகும். அசாத்மௌலானாவின் திட்டமிட்ட சூட்சிகளில் ஒன்றை மட்டும் இங்கு சுட்டி காட்டுகின்றேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஓர் இராணுவ கட்டமைப்பை வைத்திருக்கின்றனர் என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டும் போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் இராணவப் பிரிவு கிடையாது நாம் ஆயுதங்களை வைத்திருக்கின்றோம் அவை எமது பாதுகாப்பிற்கு என கூறிவரும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவிற்கான தலைவர் கருணா அம்மான் என அசாத்மௌலானா கூறியதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் இராணுவப் பிரிவு ஒன்று உண்டென உலகிற்கு கூறியுள்ளார். அத்துடன் இலங்கை அரசியல் யாப்பின் எந்த சரத்து அரசியல் கட்சியொன்றிற்கு இராணுவப் பிரிவொன்றை வைத்திருக்க அனுமதி அளித்திருக்கின்றது? என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர்.
எனவே இவ்வாறான விஷமிகளின் திட்டமிட்ட சதிகளில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைக் காத்துக்கொள்ளவேண்டுமாயின் பிரதேசத்தில் உள்ள நலன்விரும்பிகள், புத்திஜீவிகளை உள்வாங்கி அவர்களது உபதேசங்களைப் பெற்று கட்சியை மறுசீரமைப்பு செய்து அனைவரும் மக்களுக்காக உழைக்க முன்வர வேண்டும். அன்றேல் தங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமைகளின் அடிப்படையில் பிரிந்து சென்று தனித்தனி அமைப்புக்களை நிறுவி உயிர் அழிவுகளை தவிர்த்து கொள்ளதே மக்களின் வேண்டுதலாகும். VIII
0 comments :
Post a Comment