Friday, November 28, 2008

கொலைகளை நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் - 28.11.2008



மாநகரசபை, மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களின் ஒன்றியம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் படுகொலைகளை நிறுத்தக் கோரி இன்று (28.11.2008) இவ் உண்ணாவிரதம் இடம்பெறுகிறது. மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்- உள்ளுராட்சி தவிசாளர்களின் ஒன்றியம் இவ்வுண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்துள்ளது. மட்டக்களப்பு மாநகர மணிக்கூட்டு கோபுரத்தின் அருகே இவ்வுண்ணாவிரதம் நடைபெறுகின்றது. இவ்வுண்ணாவிரதத்தை தலைமையேற்று மட்டக்களப்பு மாநகர மேயரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சர்வகட்சிப்பிரதிநிதியுமான சிவகீதா பிரபாகரன் (பத்மினி) நடத்துகிறார். மற்றும் மாநகரசபை ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எட்டு உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேற்படி உண்ணாவிரத நிகழ்வினையொட்டி மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் விநியோகிக்கப்பட்டுள்ள பிரசுரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் படுகொலைகள் அதிர்ச்சிதரும் வகையில் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக படுமோசமான முறையில் படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. மேற்படி கொலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பானது எமது மக்களை பாரிய அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளதோடு. கிராமங்களில் பதற்றநிலையும், பயங்கரமான சூழலையும் தோற்றுவித்துள்ளது..

வீடுகளுக்குள் புகுந்து குடும்பத்தினர் அனைவரையும் கூட்டாக படுகொலை செய்வது என்பது காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடுகள் என்பதை நாம் பகிரங்கமாக அறிவிக்க கடப்பாடுகொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் மட்டுமன்றி எப்போதுமே அரச கட்டுப்பாட்டுப் பகுதியாகவே இருந்து வரும் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், அமைந்துள்ள ஆரையம்பதி, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, எருவில் போன்ற பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களில் மட்டும் 13 பேர் கொல்லப்பட்டுள்ளமை எம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இப்படியான தொடர், கூட்டுப்படுகொலைகள் நடத்தப்படுவது என்பது மக்களிடத்தில் வழமைக்கு மாறான பலத்த சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளமையை நாம் அவதானிக்க முடிகின்றது.

புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட நிலையில் மேற்படி படுகொலைகளுக்கு பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் பாதுகாப்புப் படையினரே என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்தக்கொலைக்கலாச்சாரம் தொடர்ந்தால் அது கிழக்கு மாகாணத்தின் இயல்பு நிலையை முற்றாகவே சீர்குலைக்கும் என நாம் அஞ்சுவதோடு, எமது மக்களின் பொறுப்பு மிக்க பிரதிநிதிகள் எனும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் இப்படுகொலைக் கலாச்சாரத்தை மானிட விழுமியங்களுக்கு எதிரானதும் மிலேச்சத்தனமானதுமான செயற்பாடுகளென அடையாளம் காணுகின்றோம்.

எமது மக்கள் மீது கட்டவிழத்து விடப்பட்டிருக்கும் இப்படுகொலைகளை நாம் மிக வன்மையாக கண்டிப்பதோடு இப்படுகொலைகளில் தமது உறவினர்களை இழந்த சொந்த பந்தங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது மக்கள் இறைமையுள்ள இலங்கையின் பிரஜைகள் என்னும் வகையில் அவர்களது அச்சமற்ற வாழ்க்கையை உறுதிப்படுத்தும் கடப்பாடு எமக்கு உள்ளது.

ஆகவே எமது கௌரவ முதலமைச்சருக்கும், கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும், கண்ணியமிக்க சர்வதேசத்திற்கும் நாம் கீழ்வரும் வேண்டுகோள்களை பகிரங்கமாக விடுக்க கடமைப்பட்டுள்ளோம். எனத்தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கீழ்வரும் வேண்டுகோள்கள் முன்வைக்கபட்டுள்ளன.

கிழக்கில் நடைபெறும் படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

கடத்தல்கள், காணாமல்போதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

எமது மக்களினதும் பிரதேசத்தினதும் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த 26ம், 27ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 22க்கு மேற்பட்ட கூட்டுப்படுகொலைளும் ஏனைய படுகொலைகளும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

உண்ணாவிரதத்தில் பின்வரும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

நிறுத்து நிறுத்து கொலைகளை நிறுத்து, வாழவிடு வாவிடு ஜனநாயகத்தை வாழவிடு, கொல்லாதே கொல்லாதே குழந்தைகளைக் கொல்லாதே, உறுதிப்படுத்து உறுதிப்படுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

மேற்படி நிகழ்வில் பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகள், மாவட்ட இந்து இளைஞர் பேரவை, மற்றும் கத்தோலிக்க, பௌத்த மதகுருக்கள், மௌலவிமார், மாகாணசபை உறுப்பினர்களான துரைரெட்ணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் கைலேஸ்வரராஜா, ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியின் செயலாளரும் இனநல்லுறவுப் பணிப்பாளருமாகிய ஸ்ராலின் போன்றோரும் பங்கெடுத்தனர். மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் படுகொலைக்கான மக்கள் பிரதிநிதிகள் அனைவரதும் கிழக்கு மக்களின் ஜனநாயகக் குரல்களை சர்வதேசத்திற்கு அறிவிக்கும் பலமான ஒரு குரலாக இருக்குமென நம்பப்படுகிறது.

கு.சாமித்தம்பி
மட்டக்களப்பு

No comments:

Post a Comment