இழப்பீட்டுக் கல்வி செயற்திட்டம் - மட்டு.மாவட்டத்தில் நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளை விட்டு இடைவிலகிய மாணவர்களுக்கு இழப்பீட்டு கல்விச் செயற்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. மட்டக்களப்ப மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் கல்விக் கோட்டப் பிரிவுகளில் பாடசாலைகளை விட்டு இடை விலகிய 250 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை மீண்டும் பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன் தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இழந்த கல்வியை மீண்டும் வழங்குவதற்கான 10 நிலையங்களில் விசேட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பொருத்தமான வகுப்புகளில் இந்த மாணவர்கள் அனுமதிக்கப் படவுள்ளனர் எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இழப்பீட்டுக் கல்விச் செயற்திட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி செயல் அமர்வு கடந்த வாரம் ஏறாவூர் அல்- முனீதா மகளிர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
0 comments :
Post a Comment