Tuesday, October 21, 2008

தற்கொலை குண்டுதாரிக்கான தொலைபேசி அழைப்பு அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வந்துள்ளது.



அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து பொரலஸ் கமுவவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய பெண்ணுக்கான கடைசி தொலைபேசி அழைப்பு கொழும்பு அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 7 கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்தே குறித்த தற்கொலை குண்டுதாரியை இயக்கிய சந்தேக நபர் அவருக்கு அழைப்பினை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் பிரதம நீதியரசர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் இந்த அதியுயர் பாதுகாப்பு வலயத்திலேயே இருக்கின்றனர். குண்டுதாரியை இயக்கியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரே இந்த அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து கடைசி தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளதாக குண்டுதாரி பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசியின் சிம் கார்ட் தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடாத்தப்பட்ட அன்று சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர் ஒருவர் பண்டாரகம பகுதிக்கு சென்றிருக்கலாம் என்றும் அவர் வழங்கிய தகவலின் பேரிலும் குண்டுதாரியை இயக்கியதாக நம்பப்படும் சந்தேக நபரின் அறிவுறுத்தலின் பேரிலுமே இந்தக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment