கருணா அம்மான் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.
மக்களின் மனங்களில் தன்னம்பிக்கையும் தனித்துவமும் ஏற்படும் போதுதான் அன்றாட வாழ்க்கையில் முன்னேற்றமும் அதுபோன்று அபிவிருத்திகளும் ஏற்படும்.
காலம் சரியில்லை நேரம் சரியில்லை காலம் பதில் சொல்லும் கடவுள் பார்த்துக் கொள்வான் என்று காத்துக் கிடக்காமல் எங்கள் கடமைகளை காரியத்தைக் காலச் சூழலுக்கு ஏற்றபடி ஆற்ற முனைவது சாலச் சிறப்பானதாகும். யுத்தம் என்ற பிடியில் சிக்கிச் சொல்லொணாத் துன்ப துயரங்களையும் உயிரிழப்பு, சொத்திழப்பு என்று விரக்தியின் விழிம்பில் காலத்தைக் கடத்திக் கொண்டு ஏதோ வாழ்ந்துகொண்டிருக்கும் எம் மக்களை இயற்கையின் சீற்றங்களும் விட்டுவைக்கவில்லை.
அந்தக் கடல் கோள் அனர்தங்களைவிட 20 (இருபது) வருடங்களுக்கு மேலாக எம்மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ள யுத்தம் அணுவணுவாய் எம்மினத்தை, சந்ததிகளை எமது உறவுகளை, தமிழர் தடயங்களை, தமிழ்க் கலாச்சார பண்பாடுகளை சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியுள்ளதை நாம் அறிவோம். முடிவே இல்லாத இந்த மதி கெட்ட யுத்தத்தால் பல நூற்றுக்கானோர் புலம் பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இன்னும்பல நூற்றுக்கணக்கானோர் அழித்தொழிக்கப்பட்டார்கள. இந்த இரு பிரிவுகளிலும் எத்தனையோ அறிவாளிகள் புத்தி ஜீவிகள் கல்விமான்கள் வழிகாட்டிகள் இருந்தார்கள் என்பதைச் சிந்தித்து பார்க்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
இந்த நிலையால் எமது தமிழினம் பல்வேறுபட்ட துறைகளிலும், பிரிவுகளிலும், நிலைகளிலும் பின் தள்ளப்பட்டுள்ளதை அறிவோம். வீரம் மட்டுமல்ல விவேகமும் உள்ள எமது இனத்தை மீண்டும் விரைவாகக் கட்டியெழுப்பவேண்டியது எங்கள் எல்லோரதும் தயையாய கடமையாகும. யுத்தம் என்ற பிடிக்குள் சிக்கவைத்து முட்டாள்கள் ஆக்கப்பட்டதாலேயே இன்று 22 பாராளுமன்ற அங்கத்துவம் இருந்தும் வீணே காலத்தைக் கடத்தும் மேடைப் பேச்சாளர்களாக மட்டும் இருக்கின்றோமே தவிர மக்களுக்கு ஆக்கபூர்வமான எந்த ஒரு எதிர்காலத் திட்டங்களுக்கும் வழியமைக்க இயலாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளோம்.
என் நேசத்திற்குரிய மக்களே! எங்களுக்குள் ஒரு விழிப்பு நிலை ஏற்பட்டால் மட்டுமே நாம் அபிவிருத்தியில் சிறுமாற்றத்தையாவது ஏற்படுத்த முடியும். எல்லாமே அரசு செய்யும் தொண்டர் நிறுவனங்கள் செய்யும் அரசியல் கட்சிகள் செய்யும் என்று எல்லாவற்றுக்கும் எதிர்பார்புக்களுடன் காத்துக்கொண்டு காலத்தை வீணடிப்பது எமது இனத்தின் பின்னடைவுக்கு வழிகோலுமே தவிர முன்னேற வழி அமைக்காது. அது தற்காலிக உதவித்திட்டங்களும் ஊக்குவிப்புக்களுமே தவிர நிலையான தொடர் சீவியத்திற்கு வழியமைக்காது. எமது நாட்டில் பசி, அச்சம், ஏழ்மைநிலை, தொழில்வாய்ப்பின்மை என்பன இல்லாமலும் இல்லை. அதற்காக வாழ்கையின் முழுப் பகுதியும் உதவிகளையும் நன்கொடைகளையும் எதிர்பார்த்திருப்பது எமது எதிர்கால இனத்தின் அபிவிருத்திக்குத் தடையாக அமைந்துவிடும்.
எனவே அன்புக்குரிய மக்களே! எமது பிரதேசங்களில் கிடைக்கக் கூடிய எத்தனையோ வகையான மூலவளங்கள் உள்ளது அந்த மூலவளங்களைப் பயன்படுத்தி சிறு கைத்தொழிலையாவது கற்றுக்கொள்ள முனைய வேண்டும். முன்பு ஆண்டாண்டு காலமாக விவசாயம் சேனைப்பயிர்ச் செய்கை கால்நடைவளர்ப்பு கோழிவளர்ப்பு மீன்பிடி மற்றும் கைத்தொழில் கைப்பணித் தொழில்கள் என்று பல்வேறு வழிகளிலும் தொழில் செய்து வந்தவர்கள் இன்று அதை மறந்தவர்களாக விருப்பமற்றவர்களாக இருப்பதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. இதற்கெல்லாம் யுத்தம் ஒரு மூலகாரணமாக இருந்தது உண்மையே.
எனது அன்பார்ந்த மக்களே! இனி வருங்காலங்களில் யுத்தம் என்ற பீதி மக்களிடம் இருந்து களைந்து எறியப்படும். அதற்காக எமது கட்சி ஆக்கபூர்வமான பல வியூகங்களை வகுத்துள்ளது என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன். இங்கே முயற்சி தேடல்கள் உள்ளவர்களின் தேவைகள் நிச்சயம் கருத்தில் கொள்ளப்படும. கைத்தொழில் இருந்தும் தெரிந்தும் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் ஏதோ ஒரு தடைப்பட்ட சூழலில் காத்திருப்பவர்களின் ஏக்கங்கள் எமது கட்சியினால் கருத்தில் எடுக்கப்படும். தொழிற்கருவிகள் கடன் வசதிகள் மூலதன மூலவள மற்றும் ஏனைய தடையான சூழ் நிலைகளையும் எமது கட்சி கவனத்தில் கொண்டுள்ளது. இந்தக் கைத்தொழில் முயற்சியும், விருத்தியும் எதிர்காலத்தில் எம்மால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.
கடந்த 20 வருடகாலமாக படுபாதாளத்தில் தள்ளப்பட்டுச் சென்ற அபிவிருத்திப் பணிகளை ஒரே வருடத்தில் ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதோடு எமது கட்சியும் இது சம்பந்தமாக பல ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்துள்ளது. அது காலப்போக்கில்; நடைமுறைக்கு வரவும் உள்ளது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அதேவேளை கடந்த சுனாமி அனாத்தத்தின் மூலம் எமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட சலுகைகள், உதவிகள் எல்லாமே எதிர்காலத்தில் தமக்கு தெரிந்த ஏதாவதொரு கைத்தொழில் துறையைக் கற்றுக்கொண்டு தமது எதிர்கால முன்னேற்றத்தை வளப்படுத்திக் கொள்வதற்கே ஆகும். அத்தோடு இனிவரும் காலங்களில் எமது மக்கள் அரசையோ, தொண்டர் நிறுவனங்களையோ, அரசியற் கட்சிகளையோ நம்பிக்கொண்டு காலம் கடத்தும் நிலை மாற்றப்படவேண்டும். சுயமுயற்சி, உழைப்பு என்ற மூலதனத்தைக் கொண்டு எமது எதிர்கால வாழ்வை சீர்படுத்திக் கொள்ள முனைய வேண்டும்.
அதேவேளை அரசோ, தொண்டர் நிறுவனங்களோ, கட்சிகளோ உரிய துறையில் மக்களை ஊக்கப்படுத்தி அவர்களை சுயமாக இயங்க வைக்கும் ஊக்குவிப்பாளர்களாக இருந்து செயற்பட முன்வர வேண்டும். யுத்தம் என்ற நொண்டிச் சாட்டு எம்மக்களிடமிருந்து முற்றாகக் களைந்தெறியப்பட்டு எமது மக்களைப் பல பிரிவுகளிலும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதே எமது இலக்காக இருப்பதால் நான் அன்புடன் நேசிக்கும் எமது மக்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டும் என்பதையும் எமது கட்சியும் மக்களுடன் மக்களாகவே இருந்து அர்ப்பணிப்புடன் மக்கள் பணியைச் செய்யும் என்பதனையும் இங்கே அன்புடன் முன்வைக்கிறேன்.
இவ்வண்ணம்
கருணா அம்மான்
தலைவர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.
0 comments :
Post a Comment