Wednesday, October 22, 2008
தமிழகத்தின் ஆதரவுக்குரல் புலிகளை பாதுகாப்பதாக அமைந்து விடக் கூடாது.
தமிழ்நாட்டு மக்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் அது புலிகளை பாதுகாப்பதாக அமைந்துவிடக் கூடாது என விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி.தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் ஊடக நிறுவனத் தலைவாகள் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பொன்றை ஜனாதிபதி நேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முரளிதரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில் இந்தியாவிலுள்ள எந்த ஒரு அரசியல் தலைவரும் இலங்கையில் தனிநாடு அமைவதை விரும்ப வில்லை மாறாக இலங்கையில் மாகாண ரீதியிலான சுயாட்சி முறையையே அவர்கள் ஆதரிக்கின்றனர். நான் புலிகள் இயக்கத்தில் இருந்த போது பிரபாகரனுடன் பல இந்தியத் தலைவர்களை சந்தித்திருக்கின்றேன். அப்போது இதனை என்னால் உணர முடிந்து எனினும் பேச்சு வார்த்தை ரீதியாக அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு பிரபாகரன் என்றும் தயாரில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த பிரபாகரன் வரலாற்றுத் தவறாக இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார். தமிழ் நாட்டு மக்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் அது புலிகளை பாதுகாப்பதாக அமைந்து விடக் கூடாது. மாகாண சபை ஆட்சிமுறை தற்போது ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறான ஒரு அதிகாரத்தை வேண்டி நிற்பது யதார்த்தத்துக்கு புறம்பானது. தற்போது அவிபிருத்தி அவசியமானது. சிங்கள அரசியல் கட்சி தலைமையினதும் சிங்கள மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுப்பது மிகவும் அவசியம். வன்னியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையை கைவிட முடியாது. அவ்வாறு செய்தால் பிரச்சினை மேலும் வலுவடையும். அரசாங்கம் அனுப்பி வைக்கும் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்குடனேயே பிரபாகரன் மக்களை தனது பிடிக்குள் வைத்துள்ளார். புலிகளுக்கு தனியான பொருளாதாரம் கிடையாது அரசு அனுப்பும் பொருட்களிலேயே புலிகளும் வாழ்கின்றனர். வேறு நாடுகளிலென்றால் மோதல்கள் நடைபெறும் பகுதிக்கு பொருளாதரத் தடை ஏற்ப்படுத்தப் பட்டிருக்கும். அரசாங்கம் ஒருபோதும் பொருளாதரத் தடையை ஏற்படுத்தவில்லை என்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி தெரிவித்தார்.
No comments:
Post a Comment