Friday, October 24, 2008

பொலிஸார் மீது துப்பாக்கிப்பிரயோகம்: பதில் தாக்குதலில் ஒருவர் பலி.



புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை நகரத்தில் பொலிஸார் நேற்று நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவரே கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தங்கொட்டுவையில் நேற்று தேசிய சுதந்திர முன்னணி சார்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்சி ஆதரவாளர்களுக்கும், தங்கொட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து கட்சி ஆதரவாளர்கள் சிலர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொதுமக்கள் உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்திருந்தபோது தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட எம்.பி. யான பிரியங்கர வீரகுமார பாராளுமன்ற அமர்வுகளை முடித்துக்கொண்டு புத்தளத்தில் உள்ள தனது வீடு திரும்பும் வழியில் பொலிஸாரால் கைது செய்யப்படவிருந்த தமது கட்சி ஆதரவாளர்களை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார். அவர்களை கைது செய்யப்போவதாக பொலிஸார் கூறியபோதும் அதனையும் பொருட்படுத்தாத எம்.பி. வாகனத்தை நிறுத்தாது முன்னெடுத்துச் சென்றதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்த கட்சி ஆதரவாளர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதற்கு பொலிஸார் பதில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததிலேயே வேனில் சென்ற கட்சி ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தங்கொட்டுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையென கூறியுள்ள பொலிஸார், இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment