கப்பல் தாக்குதலுக்கு ஈ.பி.டி.பி. கண்டனம். குடாநாட்டில் இன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு.
யாழ். குடாநாட்டில் உணவுக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈ.பி.டி.பி. பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலையுயர்வு இருப்பதாகவும் வெறும் வாய்ப்பிரச்சாரம் செய்தவர்கள் மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கை பார்த்த வரலாறுகளே இருக்கின்றது. இந்நிலையிலேயே, நாம் இம்மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு இரு கப்பல்களில் அரிசி, சீனி, கட்டடப் பொருட்கள், சீமெந்து ஆகிய பொருட்களை கொண்டு சென்று கொண்டிருந்த நிலையிலேயே புலிகள் இவ்விரு கப்பல்களின் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதலானது எவ்வகையிலும் இராணுவ நோக்கம் கொண்டதல்ல. இது முழுக்க முழுக்க யாழ். குடாநாட்டு மக்களின் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என்றும் மக்களைப் பட்டிணி போடுவதன் ஊடாகவும், அம்மக்களுடைய அபிவிருத்திப் பணிகளைத் தடுப்பதன் ஊடாகவும் புலிகள் தமது யுத்தப்பிரச்சாரத்துக்கு வலுச்சோக்க முனைகின்றனர். புலிகளின் யுத்த அழிவுப்பாதையிலிருந்து விடுபட, புலிகளின் இத்தகைய மக்கள் விரோத செயல்களை எதிர்க்க, எமது எதிர்ப்பையும், கண்டனங்களையும் உலகிற்கு எடுத்துக் காட்டி குரல்கொடுக்க இத்தகைய ஹர்த்தால் ஒன்றை அனுஷ்டிப்போம் என்றும் அவர்கள் தமது அழைப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment