Tuesday, October 21, 2008

மைத்திரியை இலக்கு வைத்த தற்கொலைதாரியின் சிம் கார்ட் உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் கைது.



ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளாரும் கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்த பெண் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்திய சிம் கார்ட்டின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படுபவரை பொலிஸார் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளனர். தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட சிம்கார்ட்டின் உரிமையாளர் எனக் கருதப்படும் 4ஆம் வட்டாரம் வேலணையை சேர்ந்த தியாகராசா சுதாகரன் என்ற இளைஞனே யாழ்பாணப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளவராவார். கைதுசெய்யப்பட்ட இளைஞன் கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு அனுமதியை தருமாறு பொலிஸ் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கிய நிதிவான் அவரை அடுத்த மாதம் 03 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனத் தொடரணியை இலக்கு வைத்து கொழும்பு- ஹொரணை பிரதான வீதி பொரலஸ்கமுவ பிரிவெனா சந்தியருகில் கடந்த 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் காயமின்றி உயிர்தப்பிய அதேவேளை, பிரதியமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட 7 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com