இரு உணவுக் கப்பல்களைத் தாக்கும் புலிகளின் முயற்சி முறியடிப்பு.
இரு தற்கொலைப்படகுகள் அழிப்பு மற்றொரு படகு கைப்பற்றப்பட்டதென கடற்படை அறிவிப்பு.
வடக்கிற்கு அத்தியாவசியப் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரு வர்த்தகக் கப்பல்கள் மீது புலிகளின் தற்கொலைப் படகுகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க தெரிவித்துள்ளார். தாக்குதலுக்காக வந்த புலிகளின் மூன்று படகுகளில் இரண்டு படகுகள் கடற்படையினரின் தாக்குதலில் அழிக்கப்பட்டதோடு ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு கப்பலுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (22) காலை 5.10 மணியளவில் வடக்குக் கடலில் மயிலிட்டியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வடக்கில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற ருஹுனு, மற்றும் நிமலவ ஆகிய கப்பல்கள் மீதே புலிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். உணவுக் கப்பல்களை தாக்கவரும் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகளைக் அவதானித்த பாதுகாப்பிற்காக சென்ற கடற்படை படகுகள் அவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது புலிகளின் இரு தற்கொலைப் படகுகள் முற்றாக அழிந்து நீரில் மூழ்கியுள்ளன. இதில் பயணம் செய்த புலி உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். கடற்படையினரின் தாக்குதலில் புலிகளின் ஒரு தற்கொலைப் படகு நிமலவ என்ற கப்பலுக்கு அருகில் வெடித்துச் சிதறியதில் மேற்படி படகிற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இத்தாக்குதலில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் சடலங்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர். மேற்படி படகுகளில் 3600 மெட்ரிக் தொன் சீமெந்தும் 2500 மெட்ரிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திவாகரத்ன தெரிவித்துள்ளார். புலிகள் யாழ். மக்களுக்கு உணவுப்பொருட்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் இவ்வாறு தாக்குதல் நடத்தினாலும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஏற்றிய கப்பல்கள் யாழ்ப்பாணக் கடலில் நங்கூரமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment