Thursday, October 2, 2008
எமக்கு ஆயுதங்களின் நாட்டம் இல்லை. இலங்கை ஜனாதிபதியே எம்மிடம் ஆயுதங்களை திணித்துள்ளார் என்கின்றார் பிள்ளையான்.
முதலமைச்சரின் ஆலோசகர் ரகு மற்றும் அசாத் மௌலானவின் கைத்துப்பாக்கிகளைக் களைவது எப்போது?
கடந்த வாரம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அமெரிக்க உதவியுடன் நிறுவப்பட்ட தொழில் பயிற்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்து உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பேசுகையில் இலங்கையில் மக்களுடைய வாழ்கைத்தரம் உயரவேண்டுமாயின் மாணவர்களுடைய கல்வித்தரம் மேம்படுத்தப்பட வேண்டும். இங்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலிட முன்வர வேண்டுமாயின் இங்குள்ள நிலைமைகள் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். அவ்வாறாயின் பிரதேசத்தில் உள்ள ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் அதற்கான முழுப்பொறுப்பையும் இலங்கை ஜனாதிபதி அவர்களும் மாகாண முதலமைச்சர் அவர்களுமே எற்று கொள்ள வேண்டும். ஆயுதக் குழுக்களின் ஆயுதக் களைவு விடயத்தில் நான் முதலமைச்சர் அவர்களிடம் பேசினேன். முதலமைச்சர் பிரதேசத்தில் உள்ள ஆயுதக் குழக்களின் ஆயுதங்களைக் களைவதற்கு தான் முற்று முழுதாக ஓத்துழைப்பாதாக உறுதியளித்துள்ளார் என்றார்.
இலங்கையில் கிழக்கில் மட்டுமல்ல அகில இலங்கையிலும் இயங்குகின்ற ஆயுதக் குழுக்களினுடைய ஆயுதங்கள் மட்டுமல்ல அரசியல் வாதிகளிடம் உள்ள ஆயுதங்களும் களையப்பட வேண்டும் என்பது அனைவரதும் வேண்டுதலாகும். இந்த வேண்டுதலானது மிகவும் சாதாரணமானதும் தேவைக்கு உரியதுவுமே. ஆனால் கடந்த காலங்களில் அரசுடன் இடம்பெற்ற சாமானப் பேச்சுகளின் போதும்; சரி அதற்கு முந்திய காலங்களிலும் சரி விடுதலைப் புலிகளின் குறி இதர குழுக்களை நிராயுத பாணிகளாக்கி அவர்களை கொன்றொழிப்பதாகவே இருந்து வந்தது. புலிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு நோர்வே உட்பட பல மேற்கத்தைய நாடுகள் துணை நின்றுள்ளன. நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் புலிகள் இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இதர குழுக்களின் ஆயுதக் களைவை நிபந்தனையாக சேர்த்துக் கொண்டதுடன் அவ்விடயத்தை துரிதப்படுத்தி மாற்று இயக்க உறுப்பினர்களை நிராயுதபாணிகளாக்கி அவர்களைக் கொன்றொழித்து தமது ஏகபிரதிநிதித்துவ கொள்கையில் வெற்றி காண முயற்சித்து இருந்தனர்.
ஆனால் இன்று நிலைமைகள் மாறி புலிகள் வன்னியின் ஒரு சிறு நிலப்பரப்பினுள் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில் கெரில்லா யுத்தம் ஒன்றிற்கு தயாராகி வருகின்றனர். கெரில்லா யுத்தத்திற்காக இராணுக்கட்டுபாட்டில் உள்ள மக்களோடு சங்கமிக்க இருக்கும் புலிகள் முதலில் இதர ஆயுதக் குழுக்களிலேயே கை வைப்பர் என்பது யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில் அமெரிக்க தூதரின் அணுகு முறையானது அவர்களது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி நிற்கின்றது. உள்நாட்டு அரசியல் விவகாரங்களிலே தமிழ் குழுக்களின் ஆயுதக் கையாடல் பெரும் சர்சைகளைக் கிளப்பி வருகின்ற மறுபுறத்தில் புலிகளுக்காக பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பினரும் இக்கோரிக்கையை தொடர்சியாக வலியுறுத்தியே வருகின்றனர். ஜனாதிபதி உட்பட அரசின் சகல தரப்பினரும் புலிகளின் ஆயுதங்கள் முற்றிலும் களையப்படும் வரை புலிகளால் உயிர் அச்சுறுத்தல் உள்ள தமிழ் குழுக்குளின் ஆயுதங்களை களைவதென்பது அவர்களை மேலும் உயிர் ஆபத்திற்கு உள்ளாக்கும் என திடமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் என சொல்லப்படுகின்ற பிள்ளையான் இவ் ஆயுதக் களைவு விடயத்தில் அமெரிக்க தூதுவருக்கு அளித்திருக்கின்ற உறுதி மொழியானது பல தரப்பினரையும் விசனம் கொள்ள வைத்துள்ளது. கடந்த காலத்தில் நிராயுதபாணிகளாக்கப்பட்ட இதர தமிழ் கட்சி உறுப்பினர்களை வகைதொகையின்றி சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் சுட்டுக் கொன்ற அந்த கசப்பான அனுபவங்களை கொண்டு இலங்கையின் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்புக்கென வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என அமெரிக்க தூதருடன் பிள்ளையான் உடன் பட்டுள்ளமையானது முழு நாட்டையும் காட்டிக் கொடுக்கின்ற செயலாக அமைந்துள்ளது.
இங்கு இதர குழுக்களின் ஆயுதக் களைவுக் கோரிக்கைக்கு பிரதேசத்தில் இடம் பெறுகின்ற கடத்தல், கொலை, கொள்ளை போன்ற மனித உரிமை மீறல்களையே காரணியாக முன்வைக்கின்ற தருணத்தில் முதலமைச்சர் என்பதற்கு அப்பால் கிழக்கு மாகாணத்திலே அதிக செல்வாக்கு செலுத்துகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவரான பிள்ளையான் தமது இயக்க போராளிகளை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என்று கூறுவது தமது போராளிகளின் ஆயுதங்கள் மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளுக்கு உபயோகப்படுகின்றதென ஏற்றுக் கொண்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.
முதலமைச்சர் பதவியில் மாத்திரம் பற்று கொண்டுள்ள பிள்ளையான் அப்பதவியில் நிலைத்து நிற்பது எவ்வாறென தெரியாமல் தடுமாறுவது இங்கு வெளிப்படையாக தெரிகின்றது. கடந்த மாதம் இலங்கை அரசிற்கு தெரியாமல் இந்தியாவிற்கு தமது ஆலோசகரான ரகு என்பவரை அனுப்பி இந்திய அரசுடன் ஒட்டி கொள்ள எடுத்த முயற்சி அம்பலமாகி உள்ளதை தொடர்ந்து இவர் பதவியை தக்க வைக்க எதுவும் செய்வார் என உணர்ந்துள்ள அமெரிக்க தூதுவர் இவரை இலங்கை அரசுக்கு எதிரான ஒரு சாதனமாக பயன் படுத்தியுள்ளார். ஊடகங்களில் படங்கள் வெளியிடுவதை மாத்திரம் இலக்காக கொண்டு இராஜதந்திர மட்டத்தினரை சந்திக்க அலையும் முதலமைச்சருக்கு அரசியல் விவகாரங்களில் அறிவு போதாமையும் ஆங்கிலம் பேசத்தெரியாமையும் இவர் சந்திக்கும் இராஜ தந்திரிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. விடயங்களில் விவாதிக்க போதிய அறிவு கிடையாமையால் எல்லாவற்றிற்கும் தலையசைக்க வேண்டியுள்ளது. இவ்விடயத்தை இவ்வாரம் பிள்ளையானைச் சந்தித்த கனேடிய பிரபல ஊடகவியலாளர் ஸ்ருவர்ட் வெல் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். ஸ்ருவர்ட் வெல் தனது கட்டுரையில் தான் முதலமைச்சரைச் சந்தித்த போது முதலமைச்சரது உதவியாளரே சகல கேள்விகளுக்கும் பதிலளித்ததாக கூறியுள்ளார். யார் இந்த உதவியாளர்? இவர் ஒர் அரசியல் அறிவு படைத்தவரா? அல்லது இலங்கை அரசின் நிர்வாக சேவையில் தேர்சி பெற்றவரா? அவுஸ்திரேலிய நாட்டிலே வசித்து வந்த இவர் தனது மனைவியின் மீது புரிந்த குற்றத்திற்காக அந்நாட்டில் இருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்தார். இவரால் ஆங்கில் பேச முடியும் என்பதற்காக இராஜதந்திரம் பேசமுடியுமா? முதலைமைச்சர் கல்வியறிவு அற்றவர் நான்தான் அச்சபையை நிர்வகிக்கின்றேன் என மார் தட்டி திரியும் அடுத்த நபர் யார்? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் நிறுவப்பட்ட போது இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக அவ்வியக்கத்தின் ஊடகப்பேச்சாளராக நியமிக்கப்பட்ட இவருக்கு இதற்கு முன்பு எங்காவது இராஜதந்திரிகளை தூரத்தில் நின்றாவது பார்த்த அனுபவம் தானும் உண்டா? கிழக்கு மாகாண மக்களின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய இச் சபைக்கு ஏன் இந்த அவலம்?
கிழக்கு மாகாண சபை திறம்பட இயங்கக் கூடாது எனும் புலிகளின் எதிர்பார்பானது இன்று நிறைவேறும் கட்டத்தை நெருங்கி வருகின்றது. பிள்ளையான் முதல் அமைச்சராக இருக்கும் வரைக்கும் இச்சபை முன்னேற்றம் காணாது என்பது புலிகளுக்கு நன்கு தெரிந்த விடயம் காரணம் இவர் புலிகளியக்கத்தில் கடைசிக்கு முதல் வரி போராளியாவார். இவர் அவ்வியக்கத்தில் அரசியல் வேலைகளில் கூட ஈடுபட்ட அனுபவம் கிடையாது. 1989 களில் இருந்த வட-கிழக்கு மாகாண சபையை செயலிழக்கச் செய்வதற்கு புலிகள் கொடுத்த விலை ஏராளம். ஆனால் இங்கு புலிகள் எந்த விலையும் கொடுக்கவில்லை என்றே கூறலாம் ஆக பிள்ளையானுக்கு பதவி வெறியை (போதை) ஊட்டி உள்ளனர்.
இலங்கை அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக இதர இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ள நிலையில் இவ் ஆயுதங்களில் எமக்கு நாட்டம் கிடையாது இதை இலங்கை அரசே எம் மீது திணிக்கின்றது என்கின்ற பாணியில் பிள்ளையான் கூறியிருப்பது இவர் பதவிக்காக எவரையும் காட்டிக் கொடுக்கும் மனப்பாங்கு படைத்தவர் என்பதை காட்டுவதுடன் புலிகளினால் உயிர் அச்சுறத்தல் உள்ளவர்களது பாதுகாப்புக்காக அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவேண்டும் என குரல் கொடுத்து வந்த அனைவரது முகத்திலும் கரி பூசி உள்ளார். மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினாகள் மத்தியிலும் இவ்விடயம் பெரும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. தாங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருக்கின்ற போதும் தருணம் பார்த்து தம்மை இலக்கு வைத்து வரும் நிலையில் தமது உழைப்பில் பதவியையும் பாதுகாப்பையும் பெற்று கொண்ட பிள்ளையான் குண்டு துளைக்காத வாகனங்களில் பயனித்து கொண்டு தமக்கு வேண்டிய ரகு மற்றும் அசாத் மௌலான போன்றோரை கிழக்கு மாகாண சபை வளாகத்தில் கூட பிஸ்டல்களுடன் நடமாட அனுமதிக்கும் இவர் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்பை கேள்விக் குறிக்குள்ளாக்குவது எவ்விதத்தில் நியாயம் என ஆத்திரமடைந்துள்ளனர்.
இவர் புலிகளுக்கு மறை முகமாக உதவி புரிகின்றாரா? கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பலமாக இருப்பதனால் அங்கிருந்து புலிகளியக்கத்தில் இளைஞர் யுவதிகள் இணைவது முற்றிலும் தடைப்பட்டுள்ளது. தனது முதலமைச்சர் பதவிக்காக செய்ய முடியாத விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கி புலிகளின் கரத்தை பலப்படுத்தும் மறைமுக வேலைத்திட்டம் ஒன்று உள்ளதா என்கின்ற பலத்த சந்தேகம் இங்கு மேலோங்குகின்றது. VIII
விருகோதரன்
No comments:
Post a Comment