எனது நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமே இல்லை - ஜனாதிபதி. கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் பிரபாகரன்.
கடந்த வாரம் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசு உட்பட இலங்கையை ஆட்சி செய்த சகல அரசுகளும் புலிகள் இயக்கத்தை ஜனநாயக வழிக்கு கொண்டுவர பல பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் அவர்கள் அதற்கு எந்த காலகட்டத்திலும் இணங்கவில்லை என்றும் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்றும் இலங்கைத்தீவில் புரையோடிப்போய் இருக்கும் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு அரசியல் தீர்வே என்றும் அது பயங்கரவாதம் ஒழிக்கப்படும் சமநேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மறுபுறத்தில் இன்று இந்திய தமிழ் நாட்டு அரசியல் வாதிகளில் ஒருபகுதியினர் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் முகமாக பல்வேறுபட்ட போராட்டங்களிலும் ஒன்று கூடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயங்களில் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்விக்கு பதில், ஒன்றும் இல்லை என்றே வருகின்றது. ஆக செய்வதறியாது திகைப்படைந்து நிற்கும் பாமர மக்கள் ஏமாற்றப் படுகின்றார்கள் என்பது ஒன்று மட்டுமே உண்மை. இந்தியாவிலே பாரிய போராட்டங்கள் இடம் பெறுகின்றன, தமிழ்நாட்டு அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. அன்று போல் இலங்கையின் இறையாண்மையை மீறி இந்திய அரசு இலங்கையின் எல்லையினுள் நுழைந்து எமக்கு சாப்பாட்டுபார்சல் தன்னும் போடும் என எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றமடைய இருக்கின்றார்கள்.
ஜெயலலிதா பூரண எதிர்ப்பு!
இங்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்று கூறும் போது அங்கு தனக்கென ஓர் தனி இடத்தை வைத்துக்கொண்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவி செல்வி. ஜெயலலிதா, இந்திய பிரதமரை படுகொலை செய்த குற்றத்திற்காக பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தினது தலைவரும் இந்தியாவின் அதியுயர் மதிப்புக்குரிய உயர் நீதிமன்றத்தினால் குற்றாவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முதல்தர பயங்கரவாதியுமாகிய பிரபாகரனது யுத்தத்தை எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாதென்றும் இங்குள்ள அரசியல்வாதிகள் பிரபாகரனக்கு ஆதரவாக செயல்படுவார்களேயானால், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் மறுபுறத்தில் அங்கு தமிழர்கள் அனாவசியாமான முறையில் பாதிப்புகளுக்கு உள்ளாவது கவலை தருகின்றது என்றும், தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டியது எமது கடமை என்றும் அதேநேரம் பயங்கரவாதத்திற்கு துணைபோவது உசிதமானதல்ல என்றும் தனது தீர்க்கமான முடிவை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ள நிலையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு என்பதை மட்டும் தமிழக அரசு மறந்து விடக்கூடாது என கூறியிருப்பதானது தமிழக அரசுக்கான ஒரு சொல்லில் பதிலாகவே அமைந்துள்ளது. (One word Answer) அதாவது இலங்கை என்பது ஓர் இறையாண்மை உள்ள நாடு அவர்களது உள்வீட்டு விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு தலையிட எந்த அதிகாரமும் கிடையாது. அந்த வகையில் தமிழக அரசினது நாடகங்களுக்காக நாம் எமது எல்லையை மீறி பிறிதொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்பதே அவர் கூறியுள்ள கருத்தாகும்.
இலங்கையின் இறையாண்மையில் பிறர் தலையிட முடியாது என்பதையே தமிழ்ச்செல்வனும் கூறியிருந்தார்.
இந்த இடத்தில் அன்றைய புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தமிழச்செல்வன் அவர்கள் புலிகளியக்கத்தை ஐரோப்பிய யூனியன் தடை செய்ய முயன்ற போது "எம்மைத் தடை செய்ய ஐரோப்பிய யூனியனுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது" என கேட்டிருந்த அந்த கேள்வியை எடுத்து நோக்குவோம். அந்த இடத்தில் இருந்து நாம் சிந்திப்போமாக இருந்தால் அன்று அவர் எதைக் கூறியிருந்தார்? இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு. தனி இறைமையுள்ள ஒர் நாட்டின் பிரஜைகள் நாம். இங்கே ஓர் உள்நாட்டு போர் இடம்பெறுகின்றது. நாம் பயங்கரவாத செயல்பாடுகளை இந்த நாட்டில் மேற்கொள்ளலாம். அது எமக்கும் எமது அரசிற்கும் இடையேயான பிணக்கு. நாம் எமது நாட்டிலே மேற்கொள்கின்ற தீண்டத்தகாத நடவடிக்கைகளுக்கு எமது அரசே எம்மைத் தண்டிக்க முடியும் இது ஏனைய நாடுகளுக்கு அப்பாற்பட்ட விடயம். அவ்வாறு அவர்கள் தங்களது மூக்கை இங்கு நுழைக்கும் போது அது இலங்கையினுடைய இறைமையை மீறுகின்ற செயலாகும் என்பதே அவர் கூறிய கருத்தாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்திருந்தார்.
தமிழக அரசியல்வாதிகளின் எதிர்வரும் தேர்தலை ஒட்டிய நாடகம்.
இன்று தமிழக அரசியல்வாதிகள் எதிர்வரும் தேர்தலில் இந்திய பாமர மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பற்காக இலங்கை பிரச்சினையை துருப்புச் சீட்டாக எடுக்க முனைவது இங்குள்ள மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளும். காரணம் புலிகளின் சகல நயவஞ்சகத்தனங்களையும் உணர்ந்தவர்களாக புலிகளின் இரும்புப் பிடியில் உள்ள மக்கள் புலிகளின் கொடூரங்களில் இருந்து விடுபடுவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதுடன் தொடர்ச்சியாக அம்மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
புலிகள் தனிமைப் படுத்தப்படுவது நிச்சயமானதாகி விட்டநிலையில் புலிகளின் ஆயுத பலத்தால் பாரளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தம்மைக் கூறிக்கொள்வோர் தமது இருப்பை தக்க வைத்தக் கொள்ளும் நோக்குடன் புலிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்ச்சி இந்திய அரசியல்வாதிகளை பிழையான வழிக்கு இழுத்துச் செல்கின்றது. இந்திய அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தம்மைக் கூறிக்கொள்வோரினதும் சுய ரூபங்களை புரிந்து கொள்ள எத்தனிக்க வேண்டும்.
புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் இருந்து திட்டமிட்டே வெளியேறினார்கள்.
புலிகள் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த அனைத்து தீர்வுகளையும் புறக்கணித்து வந்தது மட்டுமல்ல தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கக் கூடிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை, அதனூடாக உருவாக்கப்பட்ட இணைந்த வட-கிழக்கு மாகாண சபையை தமது ஆயத பலம் கொண்டு கலைத்தெறிந்தார்கள். இலங்கை அரசு பேச்சுக்கு அழைத்திருந்த காலகட்டங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை திட்டமிட்டபடியே முன்வைத்து அவற்றில் இருந்து விலகி வந்திருக்கின்றார்கள்.
இறுதியாக இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இலங்கை அரசு மிகவும் இதயசுத்தியுடன் செயல்பட்டுள்ளது என்பதற்கு நியாயமான சான்றுகள் உள்ளன. ஊதாரணத்திற்கு எடுத்து கொள்வோமேயானல் பேச்சுவார்த்தைகளில் ஓர் முடிவை எட்டியிராத போதிலும் இராணுவ முகாம்களை வாபஸ்பெறுவது மிகவும் எச்சரிக்கத்தக்க விடயமாக இருந்தும் அரசு வட-கிழக்கு பிரதேசத்தில் இருந்த பல முகாம்களை வாபஸ்பெற்றிருந்தது. பாதுகாப்பு வலயங்களாக பிரகடணப்படுத்தியிருந்த ஏராளமான கடல்பரப்பை மக்களின், மீனவர்களின் வரையறையற்ற பாவனைக்கு அனுமதி வழங்கியிருந்தது. கட்டம் கட்டமாக புலியுறுப்பினர்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைய அனுமதி வழங்கியிருந்தது. இவை யாவும் முற்றிலும் இராணுவத்தினருக்கு அச்சுறத்தலான விடயமாக இருந்த போதிலும் அரசு விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகவே இருந்து வந்தது. மறுபுறத்தில் சமஸ்டி முறையிலான தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்த அரசு அமைப்பொன்றை நிறுவியதுடன் புலிகள் அவ்நிறுவனத்தினூடாக பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்தும் நேரடியாக நிதியுதவியைப் பெற அனுமதியையும் வழங்கியிருந்ததுடன் ஏகப்பட்ட விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கியிருந்தது.
ஆனால் புலிகள் மக்களின் தேவைகளில் அக்கறை கொள்ளாமல் தமது இராணுவ பலத்தை பெருக்குவதிலேயே முனைப்புடன் செயல்ப்பட்டார்கள். மீனவர்களின் மக்களின் நடமாட்டத்திற்காக அரசு விலக்கிக் கொண்ட பாதுகாப்பு வலயங்களின் ஊடாக ஆயத தளபாடங்களையும் வெடிமருந்துகளையும் கொண்டு வந்து குவித்ததுடன் அரசினால் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.
புலிகள் முன்வைத்த நிபந்தனைகளில் சிலவற்றைத் தருகின்றேன்.
1. வடகிழக்கு கடல்பரப்பில் தரையிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்தினுள் புலிகளை சுயமாக ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்
2. வடகிழக்கின் சகல பிரதேசங்களிலும் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் புலிகளை ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்.
3. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி யினரை அங்கிருந்து வெளியேற்றுவதுடன் அங்கு அவ்வியக்கத்தின் செயல்ப்பாடுகளுக்க தடைவிதிக்க வேண்டும்.
4. ஏனைய இயக்கங்களின் ஆயதங்களைக் களைய வேண்டும். (இந் நிபந்தனையை அரசு நிறைவேற்றி இருந்தது.)
5. தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசு பிரகடணம் செய்ய வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள நிபந்தனைகளில் தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய தீர்வுகள் அல்லது இலாபங்கள் யாது? ஆக புலிகள் காலாகாலமா தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் தம்மை இராணுவ ரீதியாக பலப்படுத்திக் கொள்ள முனைந்துள்ளார்களே தவிர தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்றது கிடையாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதயம் தமிழ் மக்களில் சுதந்திர அரசியலுக்கு விழுந்த பலத்த அடி.
கடந்த போர் நிறுத்த ஓப்பந்தத்தை தமது இராணுவத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்திய புலிகள் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைந்து மாற்று இயக்க போராளிகளையும் அவ்விக்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்ப்பட்ட இராணுவப் புலனாய்வாளர்களையும் அதன் அதிகாரிகளையும் கொண்றொழித்தார்கள். மக்களை அரசிற்கெதிரான கோஷங்களில் இறக்கினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் ஓர் போலிக் கூத்தைமைப்பை உருவாக்கினார்கள். இக் கூட்டமைப்பின் உருவாக்கமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு விழுந்த முதலாவது அடி எனலாம். தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரம் புலிகளின் ஆயுத பலத்தினுள் முடக்கப்பட்டது.
யார் இந்தக் கூட்டமைப்பினர்? எதற்காக இக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது? எவ்வாறு உருவாக்கப்பட்டது? என சற்று விரிவாகப் பார்போம். புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக இருக்கும் நோக்கத்துடனேயே ஆயுதங்களை கொண்டு மக்களை அடக்கி வைத்திருக்கின்றார். அதேநேரம் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தனது கட்டப்பாட்டினுள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது ஆயுத பலத்தின் மூலம் மக்களின் வாக்குகளை அபகரித்து தனது கைப்பொம்மைகளை பாரளுமன்றம் அனுப்பி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அபகரித்துக் கொண்டார். தனது கபட நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறு குழுவிற்கு தேசியக் கூட்டமைப்பு என்றும் பெயர். இக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஈபிஆர்எல்எப் என்கின்ற அணியை எடுத்துக்கொள்வோம். அவ்வமைப்பு சட்டரீதியாக ஈபிடிபி யாக, ஈபிஆர்எல்எப் (வரதர் அணி) யாக, ஈபிஆர்எல்எப் (நாபா அணி) ஈபிஆர்எல்எப (சுரேஸ் அணி) யாக நான்கு பிரிவுகளாக பிளவு பட்டு அதன் ஒரு அங்கமே இன்று இந்த கூட்டமைப்புடன் புலிகளை ஆதரித்து நிற்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியை எடுத்துக் கொள்வோமேயானால் அது இரண்டு பிரிவுகளாக பிரிந்து அதன் தலைவர் ஆனந்தசங்கரி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை பலமாக முன்வைத்து வருகின்றார். தமிழீழ விடுதலை இயக்கம் என்கின்ற ரெலோவை எடுத்துக் கொள்வோமேயானால் அது இரு பிரிவுகளாக செயல்ப்பட்டு வருவதுடன் இன்று புலிகளுடன் இணைந்திருந்து தம்மை ரெலோ என அடையாளப்படுத்தி கொள்ளும் சிவாஜிங்கம் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் புலிளால் ரெலோவினுள் புகுத்தப்பட்ட புலிகள் எனவும் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் கூறிவருகின்றனர்.
மேற்படி இந்த நபர்கள் தமிழ் மக்களால் காலம் காலமாக நிராகரிக்கப்பட்டிந்தவர்கள். இவர்கள் இன்று புலிகளின் ஆயுத பலம் கொண்டு பாராளுமன்றம் சென்றுள்ளதுடன் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் மகுடம் சூடி உள்ளனர். இவர்கள் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக முடியும் இக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கின்ற தமிழ் அமைப்புக்களின் எண்ணிக்கையை ஒரு முறை பார்த்தால் இவர்களின் தேசியத்தில் உள்ள பாசிசம் புரியும். ஓட்டுமொத்தத்தில் புலிகளின் பாசிச செல்பாடுகளுக்கு அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காக ஆயுத முனையில் மக்களின் வாக்குகளை அபகரித்து பாராளுமன்றம் சென்ற இவர்கள் புலிகளின் ஆயுத கலாச்சாரம் முடிவுக்கு வரும்போது தமது அரசியல் வாழ்வும் முடிவுக்கு வரும் என்ற பயத்தினால் புலிகளைக் காப்பாற்ற இன்று தமிழக அரசியல்வாதிகளை பிழையான வழிக்கு திசை திருப்புகின்றனர்.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் செய்யவேண்டியது.
இலங்கைத் தீவிலே இடம் பெறுகின்ற யுத்தங்களின்போது தமிழர் தரப்பினர் மிகுந்த இழப்புகளுக்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் இவ்யுத்தத்தினால் தமிழர் தரப்புக்கு மாத்திரமே பாதிப்பு என்ற விவாதத்திற்கே இடமில்லை. சிங்கள மக்கள் என்றுமே அச்சத்தில் வாழ்கின்றார்கள். தென்பகுதி பாடசாலை மாணவர்கள் குண்டுப்பீதியுடன் வாழ்கின்றார்கள், வடகிழக்கு பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள முப்படையினரதும் குடும்ப அங்கத்தவர்கள் எந்த நிமிடத்திலும் மரணச்செய்தி ஒன்று வரலாம் என்ற ஏக்கத்துடன் தமது வாழ்நாட்களைக் போக்குகின்றார்கள். எனவே இலங்கைத் தீவில் இன ஐக்யமும் சாந்தியும் சாமாதனமும் வேண்டும் என இதய சுத்தியுடன் விரும்பும் மனிதர்கள் பக்கசார்பில்லாமல் இருதரப்பினருக்கும் ஓர் தீர்வை நோக்கி நகர வேண்டி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
புலிகளது ஆயுதங்கள் என்பது சிங்கள அரசிற்கு அச்சுறுத்துலாக அமையாவிட்டாலும் அது தமிழ் மக்களின் இயல்பு வாழ்விற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்துலானது. எனவே தமிழக அரசில்வாதிகள் புலிகள் தமது ஆயதங்கைளை கைவிட வேண்டும் என அழுத்தங்களைக் கொடுப்பதுடன் இலங்கையிலே அதன் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்சி மாநாட்டில் பங்குபற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கேட்டுக்கொள்ள வேண்டும்.
இலங்கையிலே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் செயல் வேகம் மிக குறைவாக இருந்தாலும் அதற்கான 50 விழுக்காடு பொறுப்புகள் தமிழ் கூட்டமைப்பையே சாரும். தம்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனக் கூறிக் கொள்வோர் இவ்வமர்வுகளில் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் அங்கு என்ன விதமான தீர்வுகள் எமது மக்களுக்கு பொருத்தமானதென்பதை இவர்களால் முன்மொழிய முடியும் என்பதுடன் இலங்கை அரசு எவ்வித தீர்வையும் தமிழ் மக்களுக்கு தர முன்வராது எனும் பிரபாகரனின் மந்திரத்தை இவர்களும் ஓதுவதானது தீர்வுகளை இழுத்தடிக்க முயலும் தீய சக்கிகளுக்கு உறுதுணையாக அமையும். எனவே தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் புலிகள் மீதும் தமிழ் கூட்டமைப்பு மீதும் தகுந்த அழுத்தத்தை பிரயோகிப்பது இந்நிலையில் பொருத்தமானதாகும்.
விருகோதரன் VIII
0 comments :
Post a Comment