Tuesday, October 14, 2008
இலங்கையில் பெரும்பான்மையினர் தான் கௌரவமாக வாழ முடியுமா?
இலங்கைச் சிறுபான்மையினர் மத்தியில் இன்று பெரும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படும் பிரச்சினை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சிறுபான்மையினர் பற்றி அண்மையில் தெரிவித்த கருத்துக்களாகும். இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நெஷனல் போஸ்ட் எனும் கனடிய செய்திப் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானது என்றும் சிறுபான்மையினர் சிங்களவர்களுக்கு சமமாக வைத்து நடாத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் இலங்கை அரசிடம் அவர்கள் எத்தகைய கோரிக்கையையும் முன்வைக்க அருகதையற்றவர்கள் என்றும் கூறிய கருத்துக்கள் சிறுபான்மையினர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவைத்துள்ளது.
இந்நிலையில் வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இராணுவத் தளபதியின் கருத்திற்கு வலுச் சேர்க்க ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் ஒரு படி மேலே சென்று பௌத்த நாடாகிய இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமானது என்று கூறாமல் வேறு எவ்வாறு கூறுவது எனும் தோரணையில் கூறிய கூற்று வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் சிறுபான்மை மக்களை வேதனைப் படுத்தியுள்ளது. உயிர்களிடத்து கருணையைப் போதித்த புத்த பெருமானின் பாதையை நாட்டு மக்களுக்குப் போதிக்கும் பணியை முன்னெடுத்துச் செல்லும் பௌத்தபிக்கு எல்லாவெல மேதானந்த தேரரும், வாழ் நாட்களை போர் பற்றிய சிந்தனையிலேயே கழித்துவரும் பொன்சேகாவும் ஒருமித்த கருத்துடையவர்களானால் நாடு எந் நிலைக்குச் செல்லப்போகின்றதோ எனும் கவலை நாட்டுப் பற்றுள்ளவர்களை ஆட்டி வைக்கத் தொடங்கியுள்ளது.
புரட்சிக் கவிஞன் பாரதி தனது பாஞ்சாலி சபதத்தில் அன்று கூறிய 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' எனும் கூற்று இன்று நிதர்சனமாகி வருவதையே இது காட்டுகின்றது. போர் வெற்றியே அரசாட்சி எனும் நிலையில் ஆட்சியாளர் காத்திருக்க மக்களுக்கு தர்மத்தைப் போதிக்கும் பிக்குமாரும் பிணந்தின்ன முனைவது புதுமையல்ல. ஆனால் இத்தகைய மனோநிலை படைத்த இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் படையணிகளின் மத்தியில் வாழும் சிறுபான்மை மக்களின் நிலை மிகவும் அபாயகரமானதல்லவா?
1993 - 1994 காலப் பகுதியில் இந் நாட்டின் தலைவிதியினால் அதிஷ்டவசமாக ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொண்ட டி.பி.விஜேதுங்க இந் நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்களவரை மரம் என்றும் சிறுபான்மையினரை அம்மரத்தைச் சுற்றிப் படரவேண்டிய கொடி என்றும் சிறுபான்மையினரை இழிவு படுத்திக்கூறிய கருத்துக்கு எத்தனையோ படி மேல் நிலையில் அல்லவா இவ் இருவரதும் கருத்துக்கள் நிற்கின்றன. இருந்தும் ஜானாதிபதி விஜேதுங்க தனது கருத்துக்களால் எதிர்நோக்கிய தொல்லைகளை இவ் இருவரும் அறியாமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும்.
இன்றைய ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தமது பதவிக் காலத்தினுள் பயங்கரவாதத்தினையும் பிரிவினைவாதப் போரையும் இவற்றிற் கெல்லாம் காரணமான இனப் பிரச்சினைய தீர்த்து நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சத்துடன் சமத்துவமாக வாழும் வழியை ஏற்படுத்த எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது முயற்சியில் ஒரு பாதைக்கு அச்சாணியாக அவரால் தேர்ந்தடுக்கப்பட்டுள்ள அவரது நம்பிக்கைக்குரிய இராணுவத் தளபதி ஒருவர் இத்தகைய கருத்துக்களை கூறுவது சாமி வரம்கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் எனும் பழமொழியையே நினைவுபடுத்துகின்றது. இருந்தும் பொன்சேகாவினது பேட்டியின் பின்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்கள் அதற்காகத் தெரிவித்த கண்டனக் கருத்துக்கள், சோமானந்ததேரர் வெளியிட்ட ஒப்புதல் உரை, எட்டு சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக வெளியிட்ட கண்டன அறிக்கை என பலவகைப்பட்ட பரபரப்புக்கள் இந்நாட்டில் நடைபெற்றும் நாட்டின் தலைவராகிய ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் வாயே திறக்காமல் மௌனியாக இருப்பது நாட்டு நலன்கருதி தன்னலங்களைத் தியாகம் செய்து அவரோடு ஒன்றிணைந்து ஆட்சிக்கு உதவும் பலதரப்பட்டோரையும் சிந்திக்கவைக்கின்றது. ஜனாதிபதியின் கருத்து அதுவாகத்தான் இருக்குமோ? என்றும், போரில் வெற்றி உறுதியானதும் நாமும் நம்மக்களும் நட்டாற்றில் விடப்பட்டு ஏமாற்றப்பட்டுவிடுவோமோ? என்றும் சிந்திக்க வைக்கின்றது. கறிக்குள் போடப்படும் கருவேப்பிலை ஆகிவிடுவோமோ? எனச் சந்தேகம் கொள்ளவைக்கிறது.
இந் நாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளோர் பட்டியலில் அண்மைக் காலமாக முன்னணியில் திகழ்பவர்கள் சிறுபான்மையினரே என்பதில் இரண்டாம் பேச்சுக்கு இடமேயில்லை. கடந்த கால் நூற்றாண்டு கால போரியல் வரலாற்றில் சகல வளங்களையும் ஒன்று திரட்டி போருக்கு அணிவகுத்துச் சென்று தோல்வியையே தழுவிய அரசு இன்று வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கு ஊன்றுகோலாய் இருப்பவர்கள் சிறுபான்மையினரே என்பதை இன்றைய அரசு நன்கறியும். இந் நிலையில் இராணுவத் தளபதி பொன்சேகாவும் தேரரும் தெரிவித்த கருத்துக்கள் சிறுபான்மையினரை சிறுபான்மையினருக்கு தனி நாடு ஒன்றே கௌரவமான தீர்வாக அமையமுடியும் எனும் கருத்தியலை நோக்கிச் செலுத்தியுள்ளது. இத்தகைய கருத்துக்கள் இந்நாட்டில் கௌரவமாக வாழத்துடிக்கும் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பறங்கியர் எனும் பல்வேறு பிரிவினராகிய சிறுபான்மையினர் ஒரு குடையின் கீழ் அணிதிரள உதவப்போகின்றது என்பதுதான் உண்மை.
இக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏதாவது முயற்சி எடுக்கா விட்டால் இந் நாட்டில் பயங்கரவாதம் எனும் கருத்தியல் அனுமான் வால் போல் தொடரும் ஒன்றாகவே இருப்பதுடன் நாடு சுபீட்சமடையப் போவதுமில்லை மேலும் இத்தகைய கருத்துக்களால் சர்வதேச ரீதியில் களங்கமடையப் போவது சரத் பொன்சேகாவோ அல்லது எல்லாவெல மேதானந்த தேரர் போன்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்களோ அல்ல. இந் நாட்டின் பிரிவினைவாதத்திற்கு முடிவு இராணுவத் தீர்வல்ல என்றும் நாட்டு மக்கள் அனைவரதும் ஜனநாயக உரிமைகள் பேணப்படும் என்றும் ஓயாது உரையாற்றிக் கொண்டுவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இந் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை வேண்டியவர்களாய் அதற்குரிய பாதையில் பயணிக்கும் தலைவர்களுக்குமே என்பதை புத்திஜீவிகள் சம்மந்தப் பட்டவர்களுக்கு உணர்ந்த முன் வரவேண்டும்.
அன்றேல் சர்வதேச ஆதரவு பிரிவினைக்குச் சார்பாக அமைவதுடன் நில்லாமல் ஜனநாயக நீரோட்டத்தில் நுழைந்த முன்னாள் போராளிக் குழுக்களை அவர்கள் பயணிக்கும் பாதை அவர்களது சமுகத்தை கேவலப் படுத்தும் கீழ்தரமான பாதை என்று சிந்திக்கவும் வைத்துவிடும். சரத் பொன்சேகா போன்றவர்களும் அவர்களது கருத்தை ஆமோதிப்பவர்களும் கூறியவற்றைக் கேட்டும் கேளாது இருப்பவர்களும் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இலங்கைத் தீவிலுள்ள சிறுபான்மை தமிழர்களில் 25 சதவீதத்தினர் இனப் பிரச்சினைக்கு தீர்வு தனித் தமிழ் ஈழமே என்பதில் உறுதியாக இருப்பதுடன் அதை அடைவதற்காகப் ஆயுதமேந்தி போராடி வருகையில் மற்றுமொரு 25 சதவீதத் தமிழர் போருக்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிராகக் கிளர்ந்து நிற்கின்றனர். மிகுதி 50 சதவீதத் தமிழரும் எது நடந்தாலும் நன்றாகவே நடக்கும் எனும் நம்பிக்கையுடன் வாழ்பவர்கள். இந் நிலையில் சிறுபான்மையினரை இழிவு படுத்தி அவர்களது மனதைப் புண் படுத்தும் வார்த்தைகள் எது நடந்தாலும் ஒன்றுதான் எனும் மனோநிலையிலுள்ள 50 சத வீதத்தினரையும் ஏனையோரையும் மிக இலகுவாகவே தனி நாட்டுப் பாதையில் பயணிக்க வழியமைத்துவிடும.;
ஆதலால் இன்றைய ஆட்சியாளர்கள் இத்தகைய கூற்றுக்களைக் கூறுகையில் மிக எச்சரிக்கையாக இருப்பதுடன் அது பற்றிய தங்களது நிலைப்பாட்டையும் அவ்வப்போது தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் இந்நாட்டில் இனவாதமும் பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் தீர்க்க முடியாத நோயாகிவிடும்.
இலங்கையைப் பௌத்த நாடென்றும் தமிழர்கள் வந்தேறு குடிகளென்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஹெல உறுமய பிக்குகளுக்கு ஓர் அறிவுரை! இலங்கைத் தீவில் பௌத்த மதம் எவ்வாறு பரவியது அல்லது கொண்டு வரப்பட்டது என்பதற்கு ஒர் வரலாறு உண்டு. ஆனால் இந்து மதமோ தமிழர்களோ வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதேனும் உங்கள் வரலாற்று ஆவணங்களில் உண்டா? என்பதைப் புரட்டிப் பார்த்து வந்தேறு குடிகள் யார்? ஏன்பதைச் சொல்லுங்கள். எழுநூறு தோழர்களுடன் விஜயன் இலங்கைக்கு வந்ததும் குவேனியை மணந்ததும் ஆதி வரலாறு. அந்தக் குவேனி எந்த இனத்தைச் சேர்ந்தவர்? அவள் பௌத்த மங்கையா? இல்லையே! அசோகச் சக்கரவத்தி காலத்தில் மகிந்தனதும் சங்கமித்திரையினதும் வருகையும் தேவநம்பிய தீசனுக்கு பௌத்த மதக் கருத்துக்கள் போதிக்கப் பட்டதும் வரலாற்றுப் பதிவு. அவ்வறாயின் தேவநம்பிய தீசன் காலத்தில் இங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் யார்? அவர்கள் பௌத்தர்களா? இல்லையே! அவ்வறாயின் அவர்களது மதம் யாது? என்பதை ஆராய்ந்தறிய முயற்சி செய்யுங்கள்.
இதற்கான சரியான விடைகளை அறிந்து கொள்ளும் போது உங்களை அறியாமலே உங்களது தலைக்கனம் அடங்கிவிடும். திரிபு படுத்திக் திருத்தியமைக்கப்பட்ட புதிய வரலாற்றினைப் படித்த பிக்குகளுக்கு மறைக்கப்பட்ட பூர்வீக வரலாற்றைப் படிக்க வாய்ப்பு இல்லாதிருத்தல் அவர்களது துரதிஷ்டமே. இதுவே அவர்களது அறியாமைக்கும் காரணமாகும். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யக் கூலியாட்களாக இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களின் வரலாற்றுப் பதிவைக் கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினமும் வந்தேறு குடிகள் என வரையறைப்படுத்த இன்னும் துணிவார்களா ஹெல உறுமய பிக்குகள். இறைமையுள்ள பௌத்த நாடு எனப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் இவர்கள் இலங்கைத் தீவிற்கு இலகுவில் சுதந்திரம் கிடைப்பதற்காக ஆங்கிலேயருடன் போராடிய தமிழ் தலைவர்களின் வரலாறும் எரிக்கப்பட்ட வரலாற்றினுள் மறைக்கப்பட்டமை சிறுபாண்மையினருக்கு விழுந்த ஓர் அடியாகும்.
இராணுவத்தை வழிநடத்தவேண்டிய தளபதி தடம்மாறி அரசியல் தொடர்பான கருத்துக்களைக் கூற முனைந்ததால் இன்று நம் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன் ஐனாதிபதியின் முயற்சிகள் சாண் ஏறமுழம் சறுக்கிய நிலையை எதிர்நோக்குகின்றன. அவரது இனவாத கருத்துக்கள் வடக்கில் இடம்பெறும் மோதலை விஞ்சியதுடன் இன்றைய அரசுக்கு மிக மோசமான அரசியற் பின்னடைவையும் தோற்றுவித்துள்ளன. நாயின் வேலையைக் கழுதை பார்த்தால் என்ன நடக்கும்? வேடிக்கை என்னவெனில் இங்கு கழுதையல்ல நாய்தான் தண்டிக்கப்படப் போகின்றது. தளபதியின் கூற்றுக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்ட முன்னாள் போராளிக் குழுக்களையும் கட்சிகளையும் விட்டுவைக்கவில்லை. ஜனநாயக வழியில் பிரிவினைக்கெதிராக மக்களை அணிதிரட்டும் அந்தத் தலைமைத்துவங்களுக்கும் இது பெரும் தலைவலி ஆகிவிட்டது. மக்களிடையே அரசியல் புரப்புரைகளில் ஈடுபடும் அவர்களை நோக்கி மக்களால் எறியப்படும் கேள்விக் கணைகளுக்கு முகம்கொடுத்து விடையளிக்க முடியாமல் திண்டாடும் அவர்களது நிலை பரிதாபகரமானது. அரசுக்கு முண்டுகொடுத்து ஆட்சியைத் தக்கவைக்கும் சிறுபான்மைக் கட்சிகளை நோக்கி மக்கள் தொடுக்கும் கேள்விக்கணைகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் விழி பிதுங்கும் அவர்கள் மக்கள் மத்தியினின்றும் அந்நியப்பட்டு விடுவோமா? ஏன அச்சம் கொண்டுள்ளனர். இவ்விரு சாராரும் அவர்களது நிலையை மீள் பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்களென்பதே உண்மை.
நலன்விரும்பி. VIII
No comments:
Post a Comment