Tuesday, October 7, 2008
சமஸ்டி முறையை ஏற்று அன்று அன்ரன் பாலசிங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பிரபாகரன் கிழித்தெறிந்தன் விளைவு - கருணா இன்று பாராளுமன்றில் சத்தியப்பிரமாணம்.
மட்டக்களப்பின் கிரான் எனும் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கருணா அம்மான் என பலராலும் நன்கு அறியப்படும் முரளிதரன் 1966 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 07 திகதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை மட்-கிரான் மாகா வித்தியாலயத்தில் தொடங்கி இடைநிலைக்கல்வியை தற்போது கிழக்கு பல்கலைக்கழகமாக விளங்குகின்ற அன்றைய மட்-வந்தாறுமூலை மகாவித்தியாலயத்தில் கற்று தனது உயர் கல்வியை மட்-மத்திய கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் பயின்று கொண்டிருக்கும் போது இலங்கையின் இனக் கலவரம் 1983ம் ஆண்டு ஜீலை மாதம் வெடித்தது.
இக்கலவரங்களில் பாதிப்புற்ற மக்கள் பாதுகாப்பு தேடி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்திருந்தபோது அவர்களை அன்று வரவேற்று அனுசரித்த இளைஞர் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று தமிழ் மக்கள் பட்டிருந்த அவலங்களை அம்மக்களின் ஊடாக நேரடியாக கேட்டறிந்திருந்த முரளிதரன் மக்களின் விடியலுக்கான போராட்டத்தில் தன்னை முற்று முழுதாக இணைத்து கொண்டார்.
1983.10.18 திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு இராணுவப் பயிற்சிக்காக இந்தியா சென்ற அவர் அங்கு புலிகளின் மூன்றாவது பயிற்சி பாசறையில் தனது இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு இந்திய உளவுப் பிரிவினரால் விஷேட புலனாய்வுப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்தியேகக் குழுவுடன் தனது பயிற்சிகளை முடித்து வெளியேறி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வெளிக்கள பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
1985 ஆம் ஆண்டு கருணா அம்மானாக மட்டக்களப்பு திரும்பிய முரளிதரன் 1986 ஆம் ஆண்டு மட்டு அம்பாறை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். புலிகளியக்கதில் அடிக்கடி இடம் பெறும் பதவியிறக்கம், ஏற்றம், நீக்கம் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக அவ்வியக்கத்தில் இருந்து தானாகவே வெளியேறும் வரைக்கும் பல களங்களில் வெற்றிகளைக் குவித்திருந்தார். புலிகளியக்கத்தின் இராணுவ, நிர்வாக வளர்ச்சிக்கு கருணா ஆற்றியிருந்த பங்களிப்புகளென்பது பலராலும் அறியப்பட்ட விடயங்கள் ஆகும்.
புலிகள் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் பல தடவைகள் பல தரப்பினருடனும் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியாக நோர்வே நாட்டின் அனுசரணையுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை குழுவில் கலந்து கொண்டிருந்தார். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அவர் தமிழ் மக்களுக்கான தீர்வென்பதை ஏதாவது ஒரு வடிவத்தில் அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடனும் அவற்றை கொண்டு எதிர்காலத்தில் நிலைமைகளை எமது தேவைகளுக்கேற்ப மாற்றி அமைத்து கொள்ள முடியும் என்ற வியூகத்துடனும் காய்களை நகர்த்தினார்.
இந்நிலையில் ஒஸ்லோவில் இடம் பெற்ற 6ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது சமஸ்டி முறையிலான தீர்வொன்றிற்கு அரசும் புலிகளும் உடன்பட்டு புலிகள் சார்பாக உடன்படிக்கையில் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் கையொப்பமும் இடப்பட்டிருந்தது. ஓஸ்லோ 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சமஸ்டி முறைத் தீர்விற்கான உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த பிரபாகரன் அவ் உடன்படிக்கையை கிழித்தெறிய அன்ரன் பாலசிங்கத்தை நிர்ப்பந்தித்தார். இவ் விடயத்தில் பிரபாகரனை ஓர் இணக்கப்பாட்டிற்கு கொண்டு வர பெரு முயற்சி எடுத்த கருணா எந்த காலகட்டத்திலும் தீர்வொன்றிற்கு பிரபாகரன் இணங்கமாட்டார் என்பதை உணர்ந்தவராக பெருந்தோல்வியுடன் தலைநகர் கொழும்பு திரும்பி வன்னி செல்லாமலேலே நேரடியாக சிறிலங்கா விமானப்படை விமானத்தில் மட்டு தேனகம் சென்றடைந்தார். இவர் இவ்வாறு வன்னி செல்லாமல் நேரடியாக மட்டக்களப்பு சென்றமைக்கான காரணம் அவர் ஒஸ்லோவில் இருந்து பிரபாகரனிடம் கிடைக்கபோகின்ற தீர்வை ஏற்று கொள்ளவேண்டி நாடாத்திய விவாதங்கள் பிரபாகரன் எந்த நேரத்திலும் தனக்கெதிராக திரும்பலாம் என்ற சந்தேகத்தை உண்டு பண்ணியதாக தெரிகின்றது.
தேனகத்தில் தனது தளபதிகள் போராளிகளைக் கூட்டிய கருணா தமிழீழம் என்கின்ற பெயரால் அடையக் கூடிய இலகுவான இலக்குகளைக் கூட அடைய முயலாமலும் தமிழ் மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக்தானும் கருத்தில் கொள்ளாமலும் யுத்த மோகம் கொண்டு தீர்வுகளை பிரபாகரன் நிராகரிக்கின்ற விதத்தை எடுத்து கூறினார். நிலைமைகளை விளங்கிக் கொண்ட போராளிகள் தளபதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண இராணுவப் பிரிவைக் கலைப்பதென முடிவெடுத்தனர்.
தளபதிகள் போராளிகளின் முடிவை ஏற்றுக் கொண்ட கருணா தலைமையை தொடர்பு கொண்டு தமது முடிவை எடுத்து கூறியிருந்தார். இம் முடிவில் ஆத்திரமடைந்த பிரபாகரன் அங்கு வன்னியில் நிலை கொண்டிருந்த கிழக்கு மாகாண போராளிகளை நிராயுத பாணிகளாக்கி அவர்களை ஓர் வகையான சிறைப்படுத்தலுக்கு உள்ளாக்கி கண்காணித்லுக்குள் வைத்திருந்தார். நிலைமைகள் எல்லையை தாண்டி சென்று கொண்டிருந்தது கருணா பிரபாகரனுக்கு இரு கடிகங்கள் வரைந்திருந்தார். அதில் ஒன்று ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தது மற்றயது இன்று வரை வெளிவராத விடயமாகும்.
அக்கடிதத்தில் கருணா எழுதியிருந்த சில விடங்களை இங்கு தருவது சாலச் சிறந்ததாகும். பல களமுனைகளிலும் நின்று எமது போராளிகள் செத்து மடிவதை நேரில் பார்த்தவன் என்ற வகையிலும் அடைய முடியாத ஒர் இலக்கிற்காக தொடர்ந்தும் எமது போராளிகளை பலிகொடுக்க நான் விரும்பாமையாலும் நீங்கள் தொடர்ந்தும் யுத்தத்தையே விரும்புவதாலும் எனது கட்டளையின் கீழ் இயங்குகின்ற இராணுவப் பிரிவுகளை கலைத்து அப் போராளிகளை அவர்களின் உறவினர்களுடன் இணைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்க முடிவெடுத்துள்ளேன். நான் நிராயுதபாணிகளாக்கும் போராளிகளை தயவு செய்து கொன்றொழிக்க வேண்டாம் என்றும் நீங்கள் வன்னியில் முடக்கி வைத்துள்ள போராளிகளை அவர்களின் விருப்பிற்கேற்ப செயல்பட அனுமதிக்குமாறும் வேண்டுகின்றேன். அவர்களில் பலர் கிழக்கு மாகாணம் திரும்ப ஆவலுடன் இருப்பதாக நான் நன்கு அறிந்துள்ளதால் அவர்களது விருப்பு வெறுப்புகளுக்கு கௌரவமளித்து உயிர்களுக்கு குந்தகம் விளைவிக்காது அவர்களைத் திருப்பி அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். எனக் கோரப்பட்டிருந்தது.
நியாயமான கோரிக்கைகளுக்கு என்றுமே செவி மடுக்காத பிரபாகரன் தனது நயவஞ்சகச் செயல்களில் இறங்கலானார். கருணா மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அள்ளி வீசப்பட்டது. கருணா ஒர் தனிமனிதன் என அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான போராளிகளை நிராயுத பாணிகளாக்கி அவர்களை தத்தம் வீடுகளுக்கு அனுப்பியிருந்த கருணா பாதுகாப்பு காரணங்களுக்காக ஒர் சிறு படைப்பிரிவை வைத்திருந்தார். இந்நிலையில் வழமை போல் சிறிலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட பிரபாகரன் அரச அனுசரணையுடன் கருணா படைகளை குறிவைக்கலானார். இலங்கை அரச உதவியுடன் விசு மற்றும நிலாவினி போன்ற முன்னணித் தளபதிகளை பசப்பு வார்த்தைகள் கூறி தம்பக்கம் இழுத்து கொண்டதுடன் அவர்களை சித்திரவதைக்குள்ளாக்கி சிறைவைத்துள்ளது யாவரும் அறிந்த விடயம்.
இறுதி வரை சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் நகராமல் தேனகத்தில் குடி கொண்டிருந்த கருணாவை தம்வசப் படுத்திக்கொள்ள சிறிலங்கா இராணுவம் வைத்த பொறியில் அகப்பட்டார் புலம்பெயர் தேசத்து மக்களின் தீர்க்கதரிசனவாதி பிரபாகரன். கருணா படையைத் தாக்குவதானால் அதற்கு ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசு புலிகளுக்கு நேசக்கரம் நீட்டிய போது சந்திரிகா அம்மையாரைக் கட்டி அணைத்துக் கொண்ட பிரபாகரன் ஏவலானர் தன்படைகளை கிழக்கு நோக்கி. சிறிலங்கா கடற்படையின் வழித்துணையுடன் வெருகலை அடைந்த பால்ராஜ், பாணு, சொர்ணம், ஜெயம் முதலியோர் தலைமையிலான புலிப்படையணிகள் தமிழ் மண்ணில் கொலை வெறியாடின. சிறிலங்கா அரச படைகளின் வியூகம் நிறைவேறியது கருணா தேனகத்தை விட்டு வெளியேறி அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார். சிறிலங்கா அரசின் பொறியை உணர்ந்திராத பிரபாகரன் தமிழ் மக்கள் மீது படையெடுத்து பேசித் தீர்த்திருக்கக் கூடிய விடையத்தை இராணுவ பலம் கொண்டு கையாள முனைந்து தோல்வி கண்டார். இதைத்தான் தலைவர் கடந்த மாவீரன் தின உரையில் சிறிலங்கா அரசு தன்னை காலம் காலமாக ஏமாற்றி விட்டது எனக் கூறியிருந்தார்.
21 வருடங்கள் தன்னுடன் நகமும் தசையுமாக இருந்த ஓர் தளபதியுடன் எற்பட்ட பிணக்கை பேசித் தீர்க்க பக்குவப்படாத மனிதனால் மூன்று தசாப்த கால எதிரியுடன் எவ்வாறு பேச முடியும்? இன்று இத்தனை இடர்களையும் தாண்டி வந்த கருணா பேரினவாதக் கட்சிகளின் பலத்த எதிர்புக்கு மத்தியில் ஆழும் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கருணாவின் இன்றைய நிகழ்வு புலிகளின் சகல பொய்ப்பிரச்சாரங்களையும் முறியடித்துள்ளது. பிரபாகரன் தான் செய்த தவறுகளை இன்று உணர்ந்திருந்தாலும் கூட அது காலம் கடந்து பிறந்த ஞானமாகவே இருக்கப்போகின்றது. 21 வருடங்கள் நேர் எதிர் திசையில் நின்று சமர் புரிந்த எதிரியை நேசக் கரம் நீட்டி அழைத்து தமக்கே உரித்தான ஓர் அரசியல் ஸ்தானத்தை வழங்கி சிறிலங்கா அரசு தன் உயர் நிலையை நிருபித்துள்ளதுடன் நாளை பிரபாகரன் ஜனநாயக வழிக்கு திரும்பினால் வட பகுதிக்கான முதலமைச்சர் பதவியை அவருக்கு வழங்கத் தாயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரபாகரனின் தீர்க்கதரிசனம் இங்கு தான் இருக்கின்றது அவர் மக்கள் முன் வந்தால் அவர்கள் அடித்தே கொல்வார்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும். இவ்விடயத்தில் கருணா பிரபாகரனில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக காணப்படுகின்றார். கருணா மீது எத்தனையோ குற்றச் சாட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கெல்லாம் மனந்திறந்து மன்னிப்பு கோரும் மனப்பக்குவம் இன்று அவரை பல மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. VIII
விருகோதரன்
No comments:
Post a Comment