Friday, October 24, 2008
உணவுப் பொருட்களுடன் இன்று 75 லொறிகள் வன்னி பயணம்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக மேலும் 75 லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்படுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கிணங்க அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 25 லொறிகளிலும் உலக உணவுத் திட்டத்தின் 50 உணவு லொறிகளும் இன்று வன்னிக்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சுத் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் சம்பந்தமாக தெரிவித்த அமைச்சு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வன்னிப்பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அரசாங்கம் தொடர்ந்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கிறது. ஏற்கனவே முதல்தடவையாக 38 லொறிகளும் பின்னர் 25 லொறிகளுமாக, அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே இன்று மேலும் 75 லொறிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இதனைத் தவிர உலக உணவுத் திட்டம் நூற்றுக்கும் மேற்பட்ட லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வன்னிக்குத் தொடர்ந்தும் அனுப்பி வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment