Tuesday, October 28, 2008

தவறான யுத்தத்தில் 17,800 போராளிகள், 80,000 தமிழ் மக்கள் பலி.


அரசியலுக்கு வந்த நாம் தென்னிலங்கையில் நம்பிக்கை ஏற்படும் வகையில் நடக்க வேண்டும். விநாயகமூர்த்தி முரளீதரன் எம்.பி.

நாம் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்றோம். தென்னிலங்கையிலுள்ள அரசியல் தலைவர்களிடம் எம்மைப்பற்றிய சரியான நம்பிக்கை ஏற்பட வேண்டும். எனவே நாம் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவாறு நடந்து கொள்ளவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று முந்தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விநாயமூர்த்தி முரளீதரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 22 வருடங்கள் ஆயுதம் ஏந்தி போராடிய நாம் இன்று அரசியலுக்கு வந்துள்ளோம். அரசியலில் நாம் முதியவர்களல்ல, குழந்தைகள், அரசியலில் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. அதனால்தான் நாம் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்றோம். தென்னிலங்கையிலுள்ள அரசியல் தலைவர்களிடம் எம்மைப்பற்றிய சரியான நம்பிக்கை ஏற்பட வேண்டும் அதற்காக நாம் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவாறு நடந்து கொள்ளவேண்டும்.

எமது கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. இதனைப்பற்றியே நாம் முதலில் பேசவேண்டும். மாறாக சந்தேகம் வரக்கூடியவாறு அதிகாரங்களை நாம் அரசாங்கத்திடம் கேட்கக்கூடாது. எமது அமைப்பில் இராணுவத் தளபதிகளாக இருந்த பலர் இன்று அரசியல் தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களாகவும், உள்ளுராட்சி மன்றத் தலைவர்களாகவும், அதன் உறுப்பினர்களாகவும் இன்று மாற்றப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் பிடியில் இருக்கின்ற இரண்டு இலட்சம் தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களை விடுவிக்கும் காலகட்டம் நெருங்கி விட்டது.

விடுதலைப் புலிகள் வன்னியிலுள்ள இந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களை பணயக் கைதிகளாக வைத்துள்ளனர். இதுதான் இன்று வன்னி மக்களின் நிலை. கிழக்கு மாகாண மக்களுக்கு எவ்வாறு சுதந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டதோ அவ்வாறே வடமாகாண மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். சிலர் கூறுவதைப் போல எமது கட்சிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. நாம் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். எமது ஒற்றுமையைக் குலைப்பதற்கு சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. பிரபாகரன் சமாதானத்தை விரும்பவில்லை. சமஷ்டித்தீர்வை விரும்பவில்லை, தனிநாட்டையே கேட்கின்றார். இது சாத்தியமற்ற ஒரு விடயமாகும். இதனால், தேவையற்ற இந்த யுத்தத்தினால் கடந்த காலங்களில் 17,800 போராளிகளையும், 80,000 மக்களையும், இழந்து இருக்கின்றோம். பிரபாகரனின் சுயநலப் போராட்டத்தில் கிழக்கைச் சேர்ந்த 8000 இளைஞர்களைப் பலிகொடுத்துள்ளோம். இன்று கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையை வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க நாம் ஒத்துழைக்க வேண்டுமெனவும்
அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment